பாதுகாப்பான குடியேற்றம் தொடர்பான விழிப்புணர்வு நடைப் பயணம்
சென்னை: சென்னை, எலியட்ஸ் கடற்கரையில் பாதுகாப்பான குடியேற்றத்திற்கான விழிப்புணர்வு நடைப் பயணத்தை வெளியுறவு அமைச்சகத்தின் குடியேற்றப் பாதுகாப்பு அலுவலகத்தின் (POE) தமிழ்நாடு பிரிவு ஏற்பாடு செய்தது. பாத்து போங்க, என்ற பெயரிலான இந்த ஒரு மாத கால விழிப்புணர்வு இயக்கத்தில் மக்களுக்கு பாதுகாப்பான, சட்டப்பூர்வ குடியேற்ற நடைமுறைகள் குறித்தும், அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு வேலை வாய்ப்புகளின் அபாயங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட இணையதள குற்றத் தடுப்பு ஏடிஜிபி டாக்டர் சந்தீப் மிட்டல், வெளியுறவு அமைச்சகத்தின் குடியேற்றப் பாதுகாப்பு அலுவலக தலைமை இயக்குநர் திரு சுரிந்தர் பகத் ஆகியோர் கூட்டத்தில் உரையாற்றியதுடன் நடைப் பயணத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். இந்த நடைப் பயணத்தில் (வாக்கத்தான்) சுமார் 400 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாநில காவல்துறை இசைக்குழு, டிஜிபி அலுவலக தலைமையகத்தின் நிகழ்ச்சிகள், உழவன் கலைக்குழுவினரின் பாதுகாப்பான குடிப்பெயர்வு குறித்த தெருமுனை நாடகம் ஆகியவை இடம்பெற்றன. உரிமம் பெற்ற முகவர்கள் குறித்தும், ஆலோசனைகளைப் பற்றியும் கூடுதல் தகவலுக்கு, www.emigrate.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.