உள்ளூர் செய்திகள்

சட்ட கல்லுாரி மாணவிக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்

கொல்கட்டா: ஆப்பரேஷன் சிந்துார் தொடர்பாக, பாலிவுட் நடிகர்களை விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட சட்டக்கல்லுாரி மாணவி ஷர்மிஸ்தா பனோலிக்கு கொல்கட்டா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது.மேற்கு வங்க தலைநகர் கொல்கட்டாவைச் சேர்ந்த ஷர்மிஸ்தா பனோலி, 22, மஹாராஷ்டிராவின் புனேயில் உள்ள சட்டக்கல்லுாரியில் நான்காம் ஆண்டு படிக்கிறார்.சமூக ஊடக பிரபலமான இவர், சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ஆப்பரேஷன் சிந்துார் பற்றி வாய் திறக்கவில்லை எனக்கூறி, பாலிவுட் நடிகர், நடிகையரையும், முஸ்லிம்களையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.இது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, கொல்கட்டா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிந்த போலீசார், ஹரியானாவின் குருகிராமில், ஷர்மிஸ்தா பனோலியை கைது செய்து கொல்கட்டாவுக்கு அழைத்து வந்தனர்.ஜனசேனா தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் உள்ளிட்டோர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.சிறையில் அடைக்கப்பட்ட ஷர்மிஸ்தா பனோலி, கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார்.இதை விசாரித்த நீதிபதி ராஜா பாசு சவுத்ரி, ஷர்மிஸ்தா பனோலிக்கு எதிரான புகாரில் எந்த குற்றமும் இல்லை எனக் கூறி, 10,000 ரூபாய் தனிப்பட்ட பிணையில் இடைக்கால ஜாமின் வழங்கினார். மேலும், அவருக்கு பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என, ஷர்மிஸ்தாவுக்கு அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்