உள்ளூர் செய்திகள்

மூடிய அங்கன்வாடிகள் திறப்பு: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக மூடப்பட்ட அங்கன்வாடி மையங்கள், தமிழக அரசு உத்தரவை தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.தமிழகம் முழுதும் 54,483 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் போதிய ஊழியர்கள் இல்லாததால், குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், நடப்பாண்டில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டன. இது குறித்து, நம் நாளிதழில் கடந்த 5ம் தேதி செய்தி வெளியானது.இதையடுத்து, அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் ஒப்புதலுடன், நகரமயமாக்கல் காரணமாக, குறைவான குழந்தைகளுடன் அருகருகே இயங்கும் இரண்டு மையங்களை ஒன்றாக இணைக்க, கடந்த ஆறு மாதங்களாக புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை, மாநில அரசின் பரிசீலனையில் உள்ளது. அங்கன்வாடி மையங்கள் எதுவும் மூடப்படவில்லை என்று தெரிவித்தார்.அதன் தொடர்ச்சியாக, மூடப்பட்ட அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதாவது, சென்னையில் மூடப்பட்ட 147 மையங்கள் உட்பட, மாநிலம் முழுதும் மூடப்பட்ட மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகவே அவை மூடப்பட்டிருந்தன. தற்போது புதிதாக தேர்வு செய்யப்படும் ஊழியர்களை அங்கு நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இது குறித்து, அங்கன்வாடி ஊழியர்கள் சிலர் கூறியதாவது:ஊழியர்கள் பற்றாக்குறை, குழந்தைகள் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால், அருகருகே உள்ள மையங்கள் இணைக்கப்பட்டன. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், மாவட்டங்களில் இணைக்கப்பட்ட மையங்களை, மீண்டும் பழைய முறைப்படி தனித்தனியே நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஊழியர்கள் இல்லாமல் மூடப்பட்ட மையங்களில், புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள 7,783 ஊழியர்களில் இருந்து, பணியாளர்களை நியமிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்