ஆசிரியர் இயக்கங்கள் போராட்டம்; பள்ளிகளில் கற்பித்தல் பாதிப்பு
உடுமலை: தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு போராட்டத்தால், உடுமலை பகுதியிலுள்ள அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் பாதித்தது.தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை நீக்கி, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில், தொடர் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.உடுமலை நகரம், ஒன்றியம், மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும், கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த ஆசிரியர்கள் திருப்பூரில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.இதனால், பெரும்பாலான பள்ளிகளில், போதிய ஆசிரியர்கள் இல்லாமல், தற்காலிக ஆசிரியர்களை கொண்டு, பள்ளியை கல்வித்துறையினர் நடத்தினர். கிராமப்புறங்களில், பள்ளிக்கு ஒரு ஆசிரியர் என தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பள்ளிகள் திறக்கப்பட்டது.