உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் நடத்திய பாச போராட்டம்

திண்டிவனம்: திண்டிவனம் அருகே அரசு பள்ளி தலைமையாசிரியரை பணி மாறுதல் செய்ய மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.திண்டிவனம், கே.டி.ஆர்., நகரை சேர்ந்த கேசவன் மனைவி பத்மாவதி, 56; வடசிறுவளூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். அவர், கிராம மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளார்.இந்நிலையில் அவருடைய விருப்பப்படி, கல்வித்துறை அதிகாரிகள் அவரை பிரம்மதேசம், கீழ்பூதேரி அரசு நடுநிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்தனர். அவர் பணி மாறுதலுக்கு பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள், பெற்றோர், ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.தொடர்ந்து அவரை அந்த பள்ளியிலேயே இருக்க வலியுறுத்தி, நேற்று முன்தினம் மாலை பள்ளியின் நுழைவு வாயிலை மூடி, பள்ளி வளாகத்தில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.இதையடுத்து வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் மற்றும் வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் அங்கு விரைந்து மாணவர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் பேச்சு வார்த்தையில், ஈடுபட்டனர்.பள்ளி மாணவர்கள் கண்ணீருடன் அழுதபடி மன்றாடி கேட்டதால், தலைமையாசிரியர் பத்மாவதி கண் கலங்கினார். இதை பார்த்த கல்வி அதிகாரி கிருஷ்ணன், தலைமையாசிரியர் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறினார்.இதையடுத்து பத்மாவதி மாணவர்களிடம் பேசியதாவது:எனது உடல் நிலை காரணமாகத்தான் பணி மாறுதல் கேட்டேன். தெரிந்தால் நீங்கள் என்னை போகவிடமாட்டீர்கள் என தெரியும். கடந்த, 13 ஆண்டுகளாக தாயாக பிள்ளையாக பழகியிருந்தேன். என்னை விட்டு பிரிவதற்கும் உங்களுக்கு கஷ்டமாக இருக்கும். அதேபோல் எனக்கும் கஷ்டமாக இருக்கும். உங்கள் அன்பிற்கு கட்டுப்பட்டு என்னுடைய முடிவை மாற்றிக்கொள்கிறன்.இவ்வாறு அவர் பேசினார்.இதற்கு மாணவ, மாணவிகள் கைத்தட்டி வரவேற்பை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்