ஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு: விண்ணப்பிக்க கல்லுாரிகளுக்கு வாய்ப்பு
சென்னை: பட்டதாரி ஆசிரியர்களுக்கான, ஒருங்கிணைந்த நான்காண்டு பி.எட்., படிப்புக்கான அனுமதியை பெற, என்.சி.டி.இ., எனப்படும், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் கடைசி வாய்ப்பை வழங்கியுள்ளது.புதிய தேசிய கல்வி கொள்கையின்படி, பட்டதாரி ஆசிரியர் படிப்பான பி.எட்., படிப்பு, நான்காண்டு ஒருங்கிணைந்த படிப்பாக மாற்றப்பட்டுள்ளது. அதைச் செயல்படுத்த, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலான, என்.சி.டி.இ., கடந்த பிப்ரவரி மாதம் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. இதில், நிறைய கல்வியியல் கல்லுாரிகள் இணையவில்லை. இதையடுத்து, கடந்த ஜூலையில் நடந்த, என்.சி.டி.இ., உயர்மட்ட குழு ஆலோசனையில், மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.அதில், பி.ஏ., - பி.எஸ்சி., பட்டப்படிப்புகளுடன் பி.எட்., படிப்பையும் வழங்கும் திட்டத்தில் இணைய விருப்பம் உள்ள கல்லுாரிகள் விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதளம், இன்னும் இரண்டு வாரங்கள் திறந்திருக்கும் என, என்.சி.டி.இ., உறுப்பினர் செயலர் அபிலாஷா ஜா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.