பயங்கரவாதிகளை ஆதரித்த இரு பள்ளி ஆசிரியர்கள் நீக்கம்
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இரண்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டனர்.பயங்கரவாத நடவடிக்கைகளை முடக்கும் வகையில், ஜம்மு - காஷ்மீரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 2019ல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பல்வேறு இடங்களில் சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், ரியாசி மாவட்டத்தின் மஹோரில் உள்ள கல்வாவில் அரசு துவக்கப் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய குலாப் ஹுசைனின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்தன. இதையடுத்து, அவரை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, தடை செய்யப்பட்ட லஷ்கர் - இ - தொய்பா அமைப்பிற்கு தேவையான உதவிகளை குலாப் ஹுசைன் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.ரியாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கும் பணியிலும், பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்கு நிதி வழங்குவதும் கண்டு பிடிக்கப்பட்டது.மற்றொரு ஆசிரியரான மஜித் இக்பால் தார், தந்தை இறந்த பின் கருணை அடிப்படையில், ஆசிரியர் பணியில் சேர்க்கப்பட்டார். ரஜவுரி மாவட்டத்தில் பணியாற்றிய இவர், லஷ்கர் - இ - தொய்பா அமைப்புக்கு நம்பகமான நபராக இருந்துள்ளார்.போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாத செயலுக்கான நிதியை சேகரித்தல், ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுதல், நாச வேலைகளை அரங்கேற்றுதல் போன்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. கடந்த 2023ல், ரஜோரியில் வங்கி அருகே வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை மீட்கும்போது, மஜித் இக்பாலை போலீசார் கைது செய்தனர்.குலாப் ஹுசைன், மஜித் இக்பால் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியான நிலையில், அரசுப் பணியில் இருந்து இருவரும் நேற்று நீக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை, ஜம்மு - காஷ்மீரின் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா நேற்று பிறப்பித்தார்.