தேர்வு அதிகாரிகள் வெட்டியதால் மாணவியர் ஆபரணங்கள் நாசம்
பெங்களூரு: உதவி பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வு எழுத வந்த மாணவியர் அணிந்து வந்த ஆபரணங்களை, அதிகாரிகள் வெட்டியதால் மாணவியர் விரக்தி அடைந்தனர்.கர்நாடக தேர்வு ஆணையம் நடத்தும் பல்கலைக்கழக கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வு, நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. இந்த தேர்வில் பங்கேற்கும் ஆண், பெண் என இரு பாலாருக்கும் ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெண்கள் தாலிக்கயிறு, மெட்டி என இரண்டை தவிர எந்த ஆபரணங்களும் அணிந்து வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது.சில மாணவியர் கம்மல், மூக்குத்தி, செயின், குர்மாத் போன்றவை அணிந்து வந்தனர். இதனால், கடுப்பான தேர்வு மையத்தில் உள்ள அதிகாரிகள், கட்டிங் பிளேயர் பயன்படுத்தி மாணவியர் அணிந்து வந்த மூக்குத்தி, கம்மலை துண்டித்தனர்.இது மாணவியரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல மாணவியர், தங்கள் மூக்குத்தியை கழற்ற முடியாததால், அதிகாரிகள் வெட்ட வேண்டிய சூழலுக்கு ஆளாகினர். இதனால், தங்க ஆபரணங்கள் பாழாகின. ஆத்திரமடைந்த சிலர், அரசியல்வாதி, போலீஸ் என அனைவரும் சட்டப்படி நடந்து கொள்கின்றனரா என ஆவேசமாக கேட்டனர்.இதற்கு சற்றும் சளைக்காத தேர்வு அதிகாரிகள், 'சட்டம் தன் கடமையை செய்யும்' எனும் பாணியில் தங்கள் கடமைகளை செய்தனர். இதனால், விரக்தியடைந்த பல மாணவியர் தேர்வை ஒழுங்காக எழுதாமல், சோகத்தில் தேர்வறையில் இருந்து வெளியேறினர். இதுபோன்ற சம்பவங்கள் பெங்களூரு மட்டுமின்றி பல மாவட்டங்களிலும் நடந்து உள்ளன.