உள்ளூர் செய்திகள்

வேளாண் பல்கலையில் எம்.எஸ்சி., சேர்க்கைக்கு விண்ணப்பிக்க முடியல

மதுரை: வேளாண் பல்கலையில் பி.எஸ்.சி., இறுதியாண்டு மாணவர்களின் 'அரியர்' தேர்வுகள் நவ.,19 ல் முடிகிறது. எம்.எஸ்சி., சேர்க்கைக்கு நவ.,10க்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்ற பல்கலை அறிவிப்பால் 'அரியர்' வைத்துள்ள 40 சதவீத மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் அரசு, தனியார் விவசாய, தோட்டக்கலை, தொழில்நுட்ப கல்லுாரிகள் உள்ளன. 40 கல்லுாரிகளுக்கும் பி.எஸ்சி., விவசாயம், தோட்டக்கலை உட்பட நான்காண்டு படிப்புகளுக்கான பாடத்திட்டம், தேர்வுகள் ஒரே மாதிரி நடத்தப்படும்.இறுதியாண்டு மாணவர்களில் 60 சதவீதம் பேர் முதல்முறையே தேர்ச்சி பெறுகின்றனர். 45 சதவீதம் மாணவர்கள் ஒன்றிரண்டு பாடங்களில் 'அரியர்' வைத்து இறுதியாண்டில் எழுதி தேர்ச்சி பெறுகின்றனர்.பல ஆண்டுகளுக்கு முன் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கடந்தாண்டு தனியாக தேர்வு வைத்ததால், தற்போது படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாண்டுகளாக நிர்வாக காரணங்கள் என்றுக்கூறி 'அரியர்' தேர்வு வைக்கவில்லை.பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறியதாவது:ஒவ்வொரு கல்லுாரியிலும் அந்தந்த ஆண்டின் இறுதியில் 'அரியர்' உட்பட அனைத்து தேர்வுகளையும் எழுதி 95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று பட்டம் பெறுகின்றனர். இரண்டாண்டுகளுக்கான 'அரியர்' தேர்வுகள் அக்.,18ல் தொடங்கி நவ.,19ல் முடிகிறது.ஆனால் நவ.,10க்குள் எம்.எஸ்சி., மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். முந்தைய செமஸ்டர் தேர்வுகளின் மதிப்பெண்கள் இல்லாததால் எம்.எஸ்சி., படிக்க நினைக்கும் 'அரியர்' மாணவர்களின் விண்ணப்பம் ஏற்கப்படவில்லை.முதுநிலை படிப்பிற்காக ஓராண்டு காத்திருக்க வேண்டும். 'அரியர்' மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் முழுமையானால் தான் கல்லுாரிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும். இல்லாவிட்டால் 45 சதவீதம் குறைந்துவிடும்.இறுதியாண்டு மாணவர்கள் ஏற்கனவே இப்பிரச்னை குறித்து பல்கலை நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ள நிலையில் எம்.எஸ்சி., மாணவர்கள் சேர்க்கையை டிச., முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும். அதற்குள் 'அரியர்' தேர்வுக்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்