எஸ்.ஐ.ஆர்., பணியில் மாணவர்கள்; கேரள அமைச்சர் எதிர்ப்பு
திருவனந்தபுரம்: ''வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவதை ஏற்க முடியாது,'' என, கேரள பொது கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்துள்ளார்.கேரளாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதையொட்டி எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற் கொள்ளப்படுகிறது.இந்நிலையில், கேரள தலைமை தேர்தல் அதிகாரி சமீபத்தில் அளித்த பேட்டியில் எஸ்.ஐ.ஆர்., பணியில் பள்ளி மாணவர்களை தன்னார்வலர்களாக ஈடுபடுத்தலாம் என தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக, மாநில பொது கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:பள்ளியில் படிக்கும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படையினரை எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபடுத்துவதை ஏற்க முடியாது. அவ்வாறு ஈடுபடுத்தினால் மாணவர்கள் படிப்பு பாதிக்கும்.வேலை நேரத்தில் மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது என கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.இவ்வாறு பள்ளி நேரத்தில் வேறுபணியில் மாணவர்களை ஈடுபடுத்துவது கல்வி உரிமையை மீறும் செயல். ஏற்கனவே 5,623 ஆசிரியர்கள், ஊழியர்கள் எஸ்.ஐ.ஆர்., பணியில் ஓட்டுச்சாவடி நிலை அதிகாரிகளாக ஈடுபட்டுள்ளனர்.எனவே மாணவர்களுக்கு இதுபோன்ற பணியை தருபவர்கள் அவர்களுக்கு ஏற்படும் கல்வி தொடர்பான பாதிப்புக்கு பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.