கல்லுாரிகளுக்கு பயிற்சி பெற்ற பாதுகாவலர்கள் நியமிக்க உத்தரவு
சென்னை: சென்னை, கிண்டி அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுதும் பெரும் அதிர் வலையை ஏற்படுத்தியது.இதைத் தொடர்ந்து, கல்லுாரி வளாகங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வி துறை வெளியிட்டது.அதை செயல்படுத்தும்படி, உயர்கல்வி துறை சார்பில், பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:பல்கலை மற்றும் கல்லுாரிகளில் உள்ள நுழைவு வாயில்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். சுற்றுச்சுவர்களின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். கல்லுாரி வளாகங்களில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த வேண்டும். பல்கலை வளாகங்களில் பயிற்சி பெற்ற பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும்.பாதுகாவலர்களுக்கு வாக்கி - டாக்கிகள் வழங்கலாம். உள்ளூர் போலீசாருடன் இணைந்து, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வளாக பாதுகாப்பு தணிக்கை நடத்த வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.