மாணவர்களுக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள் இயக்குனர் கண்ணப்பன் அறிவுரை
கோவை: பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சிக்கு உழைத்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது.'அகாடமிக் கமிட்டி ஆப் மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்ஸ் சொசைட்டி' சார்பில், நடந்த இவ்விழாவில் விருதுகளை வழங்கி, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பேசியதாவது:கோவை மாவட்டம் கடந்தாண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில தரவரிசைப்பட்டியலில், முறையே 4 மற்றும் 6 ம் இடம் பிடித்துள்ளது. இதற்கு, தனியார் பள்ளிகளின் பங்களிப்பு அளப்பரியது.தற்போது கற்றல், கற்பித்தலில் தொழில்நுட்பங்களின் தாக்கம் அதிகரித்துவிட்டது. வகுப்பறையை ஆக்டிவ் ஆக வைத்திருக்க, தொழில்நுட்பம், பொது அறிவு விஷயங்களில், அப்டேட் ஆக இருக்க வேண்டும்.நுாலக பாடவேளையில் மாணவர்களுக்கு, புதிய புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள். அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பு கொட்டிக்கிடக்கிறது. கல்வி, சமூக ஏற்றத்தாழ்வுகளை களைந்து, மனிதத்தை விதைப்பதற்கான துாண்டுகோல்.இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில், 210 மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கும் மேல் கற்பித்தலில் ஈடுபடும், 72 ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.சி.இ.ஓ., பாலமுரளி, டி.இ.ஓ., கோமதி, தனியார் பள்ளிகள் டி.இ.ஓ., நந்தகுமார், பொள்ளாச்சி டி.இ.ஓ., மணிமாலா, அகாடமிக் கமிட்டி ஆப் மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்ஸ் சொசைட்டி கன்வீனர் ஆரோக்கிய தரயூஸ், செயலர் சரவணக்குமார், பொருளாளர் மணிமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.