தேசிய திறனாய்வு தேர்வில் மாநகராட்சி பள்ளி சாதனை
ஓசூர்: மத்திய அரசால் ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு, 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை மாதந்தோறும், 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இத்தேர்வில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 2013 - 14ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி பெற்று வருகின்றனர். கடந்த, 13 ஆண்டுகளில் இது வரை, 100 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.2025 - 26ம் ஆண்டிற்கான திறனாய்வு தேர்வு ஜன., மாதம் நடந்தது. இதில், பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர், 33 பேர் பங்கேற்றனர். அதில், மாணவர்கள் ஜீவன், ராஜவேல், ரவிவர்மா, கவுதம், வெற்றிவேல், மெளினாஸ்ரீ, ஜெயஸ்ரீ, ஸ்ரீரக்ஷா ஆகிய, 8 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் நடுநிலைப் பள்ளி அளவில், இப்பள்ளி மாணவ, மாணவியர் தான், அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மாணவ, மாணவியருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் (தொடக்கக் கல்வி) நரசிம்மன், வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டி சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கினார். ஓசூர் வட்டார கல்வி அலுவலர் வேதா, 8 மாணவர்களுக்கும் தலா, 500 ஊக்கத்தொகை வழங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் அன்னையா, ராஜூ, பள்ளி தலைமையாசிரியர் பொன்நாகேஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவி விஜி உட்பட பலர் பங்கேற்றனர்.