குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
உடுமலை: சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி, ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் தங்கவேல் முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியர் கல்பனா உறுதிமொழி கூற, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.'குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்ற, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்; தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற, என்னால் இயன்றவரை பாடுபடுவேன்,' என மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.குழந்தை தொழிலாளர் ஒழிப்பின் முக்கியத்துவம் குறித்து, தலைமையாசிரியர் மாணவர்களிடையே பேசினார்.உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணிதிட்டம் சார்பில், குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்வில், பள்ளி செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.பள்ளி தலைமையாசிரியர் சேஷநாராயணன், கல்வியின் அவசியம் குறித்து பேசினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விஜயகுமார், குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.உடற்கல்வி இயக்குனர் கருப்புசாமி நன்றி தெரிவித்தார். கட்டுரை, பேச்சு போட்டி நடத்தப்பட்டது.