அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்ஜி., வழிகாட்டி பயிற்சி
விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த வழிகாட்டி பயிற்சி முகாம் நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில், ஏழை அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிப்புக்கு உதவிடும் வகையில், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் முயற்சியால் உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை அமைத்து உதவிகளை செய்து வருகின்றனர்.இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்விக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது. பெற்றோரை இழந்த பிள்ளைகள், ஒரு பெற்றோரை இழந்த பிள்ளைகள், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிள்ளைகளுக்கு உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல்களும், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பிளஸ் 2 முடித்து, இந்தாண்டு இன்ஜினியரிங் சேர்க்கைக்காக விண்ணப்பித்து, கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள உள்ள மாணவர்களுக்கு, கவுன்சிலிங் எதிர்கொள்வது குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நேற்று நடந்தது.உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு மையம் சார்பில், விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பயிற்சி முகாம் நடந்தது. முகாமில், விழுப்புரம் அரசு பொறியியல் கல்லுாரியின் அண்ணா பல்கலை கழக கவுன்சிலிங் உதவி மைய ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் பங்கேற்று, இன்ஜி., கவுன்சிலிங்கில், பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.முகாமில், 150க்கும் மேற்பட்ட கட் ஆப் மதிப்பெண்கள் பெற்ற 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.