சிறப்பு டெட் தேர்வுக்கான பணிச்சான்று: ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
மதுரை: டிசம்பரில் நடக்கும் சிறப்பு 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் ஏற்கனவே பெற்ற பணிச்சான்றை (சர்வீஸ் சர்டிபிகேட்) மீண்டும் பயன்படுத்த டி.ஆர்.பி., அனுமதிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.பணியில் உள்ள ஆசிரியர்கள் ஜூலையில் இத்தேர்வை எழுதியபோது பணிச்சான்று பெற்றனர். தேர்வு முடிவில், தாள் 1, தாள் 2 தேர்வுகளிலும் 51 சதவீத ஆசிரியர்கள் தோல்வியடைந்தனர். இவர்கள் மீண்டும் டிச., 20ல் நடக்க உள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர்.டிசம்பர் தேர்வுக்கு புதிதாக விண்ணப்பிக்கும் ஆசிரியர் பணிச்சான்று பெற வேண்டும். ஆனால் ஜூலையில் தேர்வு எழுதி தற்போதும் விண்ணப்பிக்கும் ஆசிரியர் பழைய பணிச்சான்றையே பயன்படுத்தலாமா அல்லது மீண்டும் புதிதாக பெற வேண்டுமா என குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஆசிரியர்கள் கூறியதாவது:ஜூலை தேர்வில் தோல்வியுற்ற ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டும் விண்ணப்பிக்கின்றனர். அவர்கள் தற்போது வரை 10ம் வகுப்பு, பிளஸ் 2, டிகிரி, மதிப்பெண் சான்றிதழ்களுடன், ஜூலையில் பெற்ற பணிச்சான்றையும் பதிவேற்றம் செய்துள்ளனர். அதை பயன்படுத்தலாமா என குழப்பம் உள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்களிடமும் தெளிவான பதில் இல்லை. இதனால் விண்ணப்பங்களை 'சப்மிட்' செய்யாமல் காத்திருக்கிறோம். இதுகுறித்து டி.ஆர்.பி., விளக்கமளிக்க வேண்டும் என்றனர்.