உள்ளூர் செய்திகள்

தகவல் தொழில்நுட்ப அகடமியில் பங்கேற்க ஐ.ஐ.டி.,க்கு அழைப்பு

சென்னை: “தமிழக அரசு ஏற்படுத்தவுள்ள தகவல் தொழில்நுட்ப அகடமியில் சென்னை ஐ.ஐ.டி., ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பங்கேற்க வேண்டும்,” என முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்தார். கடந்த 1959ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி துவக்கப்பட்ட சென்னை ஐ.ஐ.டி.,யின் பொன்விழா கொண்டாட்டங்கள் ஜூலை 31ம் தேதி துவங்கியது. பொன்விழா மலரை முதல்வர் கருணாநிதி வெளியிட, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் புரந்தேஸ்வரி பெற்றுக்கொண்டார். விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:சென்னையில் ஒரு ஐ.ஐ.டி., இருப்பதில் தமிழகம் பெருமையடைகிறது. தமிழக தகவல் தொழில்நுட்ப கொள்கையை சமீபத்தில் வெளியிட்டேன்.  ஐ.டி., கொள்கையில் கூறியதைப்போல, 2011ம் ஆண்டில் 30 லட்சம் புதிய வேலைகளை உருவாக்குவதே எங்களது முதல் குறிக்கோள். தமிழகத்தில் உள்ள உயர் திறமை வாய்ந்த மனிதவளத்தின் மூலமே இந்த நம்பிக்கையை என்னால் தெரிவிக்க முடிகிறது. இதற்காகவே சர்வதேச நிறுவனங்கள் தமிழகத்தை தேர்வு செய்கின்றன. உலகச் சிறப்பு வாய்ந்த ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் இதர பல்கலைக்கழகங்கள் இத்தகைய மனிதவள ஆற்றலை உருவாக்க காரணமாக இருக்கின்றன. இத்துடன், மத்திய அரசு கோவையில் ஐ.ஐ.எம்., திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகம், திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம் ஆகியவற்றை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. மாநிலத்தில் தொழில்நுட்ப மனிதவளத்தின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. இதில், முதன்மையானது தகவல் தொழில்நுட்ப அகடமி. ஐ.ஐ.டி., ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும். தரமான மனிதவளம் உருவாவதை அதிகரிக்கவும், திறமைவாய்ந்த ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் தமிழக அரசு விழுப்புரம், திண்டிவனம், பண்ருட்டி, அரியலூர், நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரத்தில் ஆறு புதிய பொறியியல் கல்லூரிகளை துவக்கியுள்ளது. ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு பொறியியல் கல்லூரிகளில் 163 இடங்கள் என தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்தவகையில், சென்னை ஐ.ஐ.டி.,யால் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுவது சரியான வழியில் மேற்கொள்ளப்படும் முயற்சி. இதற்காக மாநில அரசு சமீபத்தில் 11 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. தமிழக அரசும் ஆராய்ச்சி பூங்கா அமைக்கும் என தகவல் தொழில்நுட்ப கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு தூரம் தோண்டுகிறோமோ அதற்கேற்ப கிணற்றிலிருந்து தண்ணீர் வருவதைப் போல, எவ்வளவு கற்கிறோமே அதற்கேற்ப அறிவு பெருகும். எப்போதும் நீடித்து இருக்கும் அறிவு ஊற்றுக்களை போன்ற கல்வி நிறுவனங்களை உருவாக்கி அதன்மூலம் நமது நாட்டையும், நாட்டு மக்களையும் சிறப்படைய செய்வோம். இவ்வாறு கருணாநிதி பேசினார். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் புரந்தேஸ்வரி ,சென்னை ஐ.ஐ.டி., நிர்வாகக்குழு தலைவர் ஆர்.சிதம்பரம், ஜெர்மன் தூதர் பெர்ன்ட் முட்செல்பர்க், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர் அகர்வால் ஆகியோரும் உரையாற்றினர். சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் ஆனந்த் வரவேற்றார். பொன்விழாக்குழு தலைவர் இடிசாண்டி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்