முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் எழுப்பிய சந்தேகங்கள்
சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல், பலருக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர், பதிவு மூப்பு தேதி ஆகியவற்றை வெளியிடாததால், சீனியாரிட்டியில் பின்தங்கியவர்கள் தேர்வு செய்யப்பட்டனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பள்ளிக்கல்வித் துறைக்கு ஆயிரத்து 76 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், சென்னை மாநகராட்சிக்கு நான்கு பணியிடங்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறைக்கு 21 பணியிடங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு 20 பணியிடங்கள் மற்றும் காவல் பயிற்சிக் கல்லூரிக்கு ஒரு பணியிடம் என மொத்தம் ஆயிரத்து 122 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம், ஐந்தாயிரத்து 610 பேர் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு அழைக்கப்பட்டனர். இந்தப் பணிகள், எல்லா மாவட்டங்களிலும் கடந்த ஜூன் 13, 14 ஆகிய தேதிகளில் நடந்தன. ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம் அழைக்கப்பட்டிருந்தாலும், பதிவு மூப்பில் யார் முதலில் இருக்கின்றனரோ அவர்கள் தான் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். ஒரு வேளை முதல் நபர் வரவில்லை என்றாலோ அல்லது வேறு காரணங்களால் தகுதி பெறவில்லை என்றாலோ, இரண்டாவதாக உள்ள நபர் தேர்வு செய்யப்பட வேண்டும். இப்படி முதல் நான்கு பேர் தகுதி பெறவில்லை என்றால், ஐந்தாவது நபர் தேர்வு செய்யப்படுவார். முதுகலை ஆசிரியர் நியமன அறிவிப்பு வெளியானவுடன், பாட வாரியாக, இட ஒதுக்கீடு வாரியாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு கட்-ஆப் தேதியை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்டது. மேலும், ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேரை தேர்வு செய்த பட்டியலையும் வெளியிட்டது. இதன் மூலம், தாங்கள் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே தெரிந்து கொண்டனர். ஆனால், ஐந்து பேரில் யார் யார் சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்ச்சிக்கு வந்தனர்? அவர்களில் யார் தேர்வு பெறுவர் என்ற விவரம் மட்டும் தெரியாமல் இருந்தது. இறுதி கட்டமாக வெளியிடப்படும் பெயர்ப் பட்டியல் மூலம், தேர்வானவர்களின் பெயரை அறிந்து கொள்ளலாம் என்றும், பதிவு மூப்பில் தாங்கள் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளலாம் என்றும் பலரும் முடிவுகளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர். குறிப்பாக பதிவு மூப்பில் இரண்டாவது, மூன்றாவது நிலையில் இருந்தவர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்து ஒன்றரை மாதம் கடந்த நிலையில், தேர்வு செய்யப்பட்டவர்களின் முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியிட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணைய தளத்திலும் வெளியிட்டது. ஆனால், முடிவுகள் தெளிவாக வெளியிடப்படாததைக் கண்டு பலரும் திடுக்கிட்டனர். தேர்வு வாரியம் வழங்கிய ‘ரோல் நம்பரை’ பதிவு செய்தால், அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்களா? இல்லையா? என்ற பதில் வருகிறது; அவ்வளவு தான். தேர்வு செய்யப்பட்ட ஆயிரத்து 122 பேரின் பெயர் பட்டியல்கள், பாட வாரியாக வெளியிடப்படவில்லை. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதிவு மூப்பு தேதியும் வெளியிடப்படவில்லை. இந்த இரண்டையும் சேர்த்து தெளிவாக முடிவை வெளியிட்டிருந்தால் குழப்பமின்றி இருந்திருக்கும். பாட வாரியாக பதிவு மூப்பில் இருப்பவர்களுக்கு, யார் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர் என்ற விவரமும் தெரிந்திருக்கும். ஐந்து பேரில் முதலில் இருந்தவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறாரா? அல்லது இரண்டாவது நபர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறாரா? என்ற தகவலை தெரிந்து கொள்ள முடியும். மேலும், பதிவு மூப்பு இல்லாதவர்கள், அடுத்ததாக தாங்கள் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். அடுத்த முறை முதுகலை ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு வந்தால், தங்களுக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என்பதை இப்போதே தெரிந்து கொள்ள வாய்ப்பாகவும் இருந்திருக்கும். இப்படி பல கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், முழுமையான முடிவுகளை வெளியிடாதது பலருக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. குறிப்பாக, பதிவு மூப்பில் இரண்டாவதாக, மூன்றாவதாக உள்ளவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.