மாநகராட்சி பட்ஜெட்டில் கல்விக்கு முக்கியத்துவம்! பற்றாக்குறை 118.22 கோடி ரூபாய்
கோவை: மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், 2024-25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட், மேயர் கல்பனா தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும், வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் முபசீரா தாக்கல் செய்தார்.பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்:* மண்டலத்துக்கு ஒரு பள்ளி வீதம், ஐந்து மண்டலங்களில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க மண்டலத்துக்கு ஒரு கோடி வீதம், ஐந்து கோடி நிதி ஒதுக்கப்படும்.* 17 மேல்நிலை மற்றும் 10 உயர்நிலைப்பள்ளிகளில், அறிவியல் உபகரணங்களுடன் அறிவியல் ஆய்வகங்களை மேம்படுத்த, ரூ.1 கோடி ஒதுக்கப்படும்.* மாணவர்கள் ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்த, தனியார் பயிற்றுனர்களை நியமித்து &'ஸ்போக்கன் இங்கிலீஷ்&' பயிற்சி வழங்க, ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.* ஆசிரியர்களை ஊக்குவிக்க, சென்னை ஐ.ஐ.டி., போன்ற முதன்மையான நிறுவனங்கள் அழைத்து செல்ல ரூ.5 லட்சம், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க ரூ.5 லட்சம் ஒதுக்கப்படும்.* பிளஸ்2 பயின்று ஐ.ஐ.டி.,/என்.ஐ.டி., போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள், மருத்துவ கல்வியில் சேரும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, அவர்களது முதலாமாண்டு கல்வி கட்டணம் ஒரு மாணவருக்கு ரூ.25 ஆயிரம் மிகாமல் செலுத்தப்படும்; இதற்கென ரூ.50 லட்சம் ஒதுக்கப்படும்.* 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் குறைந்தபட்சம் ஒரு பாடத்தில், 100 விழுக்காடு மதிப்பெண் பெறும் மாணவர் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்; இதற்கென ரூ.25 லட்சம் ஒதுக்கப்படும்.* மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்களுக்கு மேற்கல்வி குறித்த வழிகாட்டி நிகழ்ச்சிக்கு, ரூ.5 லட்சம் ஒதுக்கப்படும்.* நீச்சல், ஸ்கேட்டிங் மற்றும் சிலம்பம் பயிற்சி வழங்குதல், அங்கன்வாடி மையங்கள் புதுப்பித்தல், பள்ளிகளுக்கு லேப்டாப், கம்ப்யூட்டர், டெஸ்க் என பல்வேறு அம்சங்கள் மாணவர்களின் கல்வி புரட்சிக்கு வித்திடப்பட்டுள்ளது.பற்றாக்குறை அதிகரிப்பு!நடப்பு, 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், வருவாய் வரவு ரூ.1,636.28 கோடி மற்றும் மூலதன வரவினம் ரூ.1,545.93 கோடி என, மொத்தம் ரூ.3,182.21 எனவும், வருவாய் செலவினம் ரூ.1,353.08 கோடி மற்றும் மூலதன செலவினம் ரூ.1,947.35 கோடி என, 3,300.43 கோடி எனவும், மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், நிதியாண்டில் நிகர பற்றாக்குறை ரூ.118.22 கோடியாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.சொத்துவரி உயர்த்தப்படவுள்ளது* சீதாலட்சுமி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.92 கோடியில் புதிதாக டயாலிசிஸ் பிரிவு துவங்கப்படவுள்ளது. கர்ப்பிணிகள், தாய் சேய் இறப்புகளை குறைப்பதற்கு ரூ.65 லட்சத்தில் புதிதாக தாய்-சேய் நலம் கால் சென்டர் அமைக்கப்படும்.* கிழக்கு, தெற்கு, வடக்கு மண்டலங்களில் தலா ஒன்று வீதம் மூன்று வீடற்றோர் தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு ரூ.5 கோடிக்கு அரசின் திட்ட அனுமதி குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளது.*அம்ருத் 2.0 திட்டத்தில் நரசாம்பதி குளத்தில் ரூ.1.36 கோடி, உருமாண்டாம்பாளையம் குட்டை ரூ.25 லட்சம், சின்னவேடம்பட்டி ஏரி புனரமைப்புக்கு ரூ.1.15 கோடி, கிருஷ்ணாம்பதி ஏரியில் ரூ.1.50 கோடியிலும், குமாரசாமி ஏரியில் ரூ.3.60 கோடியிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது.* வ.உ.சி., பூங்காவில் இருந்த உயிரினங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அங்கு மாணவர்கள் போட்டித் தேர்வு உள்ளிட்டவற்றுக்கு, அமர்ந்து தயாராகும் பொருட்டு ரூ.75 லட்சத்தில் திறந்தவெளி படிப்பகம் அமைக்கப்படும்.*டோர் டூ டோர் கணக்கெடுப்பு முறையில், கட்டட அளவீடுகள் சரிபார்க்கப்படவுள்ளன. கூடுதல் கட்டடங்கள், வரி விதிப்பு செய்யப்படாத கட்டடங்கள் மற்றும் பயன்பாடு மாற்றம் செய்யப்பட்ட கட்டடங்களை கண்டறிந்து, சொத்து வரி வருவாய் உயர்த்தப்படும்.