நீட் தேர்வு கட்டண ரீபண்ட் மோசடி: 150 மாணவர்களின் பணத்தை அமுக்கிய நபர் கைது
பாட்னா: நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் ரீபண்ட் தொகையை, தனது சொந்த வங்கி கணக்குக்கு மாற்றி மோசடி செய்த பீகாரைச் சேர்ந்த 19 வயது இளைஞரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.இந்த நூதன மோசடி குறித்த விபரம் வருமாறு: பீகாரைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர், கடந்த நீட் தேர்வின் போது, கவுன்சிலிங் வைப்புத் தொகை திரும்பப் பெறும் நடைமுறையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். தேசிய தேர்வு முகமை மற்றும் மருத்துவக் கலந்தாய்வுக் குழு ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளங்களைப் போன்றே, போலி இணையதளப் பக்கங்களை உருவாக்கியுள்ளார்.150 மாணவர்கள் ஏமாற்றம்உண்மை எது, போலி எது என்று தெரியாமல், சுமார் 150க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் அந்தப் போலி இணையதளத்தில் தங்களின் விபரங்களையும், வங்கி கணக்கு எண்களையும் பதிவிட்டுள்ளனர். இதைச் சாதகமாகப் பயன்படுத்திய அந்தப் பலே ஆசாமி, மாணவர்களின் லாகின் விபரங்களைத் திருடினார்.அசல் இணையதளத்தில் புகுந்து, மாணவர்களின் வங்கி கணக்கு எண்களுக்குப் பதிலாகத் தனது சொந்த வங்கி கணக்கு எண்களை மாற்றினார். இதன் மூலம் 150 மாணவர்களுக்கான ரீபண்ட் தொகை முழுவதும் அந்த நபரின் வங்கி கணக்கிற்குச் சென்று சேர்ந்தது.போலீஸ் அதிரடி:தங்களுக்கு வர வேண்டிய ரீபண்ட் தொகை வராததால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தனர். போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கி, வங்கி கணக்குகளின் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்த போது, அனைத்துப் பணமும், பீகாரில் உள்ள ஒரே நபரின் கணக்கிற்குச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் பீகார் சென்ற தனிப்படை போலீசார், அந்த 19 வயது இளைஞரை வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். அவரிடமிருந்த லேப்டாப், மொபைல் போன்கள் மற்றும் போலி சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.