ஆசிரியர் பணியிடம் இல்லாத பாடங்களில் பிளஸ் 2 தேர்வு கள்ளர் பள்ளிகளில் 25 ஆண்டுகால அவலம்
சின்னாளபட்டி: கள்ளர் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படாத பாடங்களில் பிளஸ் 2 வரை மாணவர் சேர்க்கையும், பொதுத்தேர்வு நடைமுறையும் ஏராளமானோரை பாதிப்படைய செய்துள்ளது.இது குறித்து கள்ளர் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:மாநிலத்தில் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல், வணிகவியல்) உருவாக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 40 அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் 21 பள்ளிகளில் மட்டும் தலா 5 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். எஞ்சிய 4 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர் கல்வி பாதிப்பு தொடர்கிறது.மதுரை மாவட்டத்தில் விக்கிரமங்கலம், பாப்பாபட்டி, தும்மக்குண்டு, தாடையம்பட்டி, வெள்ளைமலைப்பட்டி, கப்பலுார், மேல்உரப்பனுார், வடக்கம்பட்டி, அய்ப்பநாயக்கன்பட்டி, மேலக்கால், திண்டுக்கல் மாவட்டத்தில் விளாம்பட்டி, காமுபிள்ளைசத்திரம், கொண்டமநாயக்கன்பட்டி, அணைப்பட்டி, தேனி மாவட்டத்தில் ஏ.புதுப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், கருநாகமுத்தம்பட்டி, மேலக்கூடலுார், ஏத்தக்கோயில், உத்தமபுரம், முத்தையன்செட்டிபட்டி என 21 பள்ளிகளில் முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை.இருப்பினும் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தமிழ், அறிவியல், கணித, வரலாறு பிரிவுகளில் மாணவர் சேர்க்கையும், பொதுத்தேர்வும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்கள் இல்லாத சூழலில் நடத்தப்பட்டு வருகிறது.குறிப்பிட்ட பாடஆசிரியர் தொடர்பற்ற மற்றொரு பாடத்தையும் கூடுதலாக கற்பிக்க வேண்டிய நிலை உள்ளது. செய்முறை தேர்வுகளையும், தொடர்பு இல்லாத ஆசிரியர்களை கொண்டு பயிற்சியும், பொதுத்தேர்வுக்கான ஆய்வக பயிற்சிகளும் நடத்துகின்றனர்.ஆசிரியர்கள், பெற்றோர் தரப்பில் பலமுறை புகார் எழுப்பியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பிளஸ் 2 முடித்து வெளியேறிய பின் உயர்கல்வியின் போதும் மாணவர்கள் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.25 ஆண்டுகளாக நுாற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி வழங்குவதில் நீடிக்கும் பின்னடைவிற்கு தற்போதாவது மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.