ஜே.இ.இ., முதன்மை தேர்வு தமிழக மாணவர் 2ம் இடம்
சென்னை: ஜே.இ.இ., பி.ஆர்க்., பி.பிளான்., படிப்புக்கான முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக மாணவர், தேசிய தரவரிசையில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.மத்திய அரசின், உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,யில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு எனும், ஜே.இ.இ., தேர்ச்சி பெறுவது அவசியம். இது, ஜே.இ.இ., முதன்மைத் தேர்வு, பிரதான தேர்வு என, இரு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. இந்நிலையில், ஜே.இ.இ., முதல்கட்ட முதன்மைத் தேர்வு, கடந்த ஜன., 21 முதல் 29ம் தேதி வரை நடந்தது.அதில், பி.ஆர்க்., பி.பிளான்., இரண்டாம் தாள் தேர்வு, ஜன., 29ல் நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியானது. அதில், பி.ஆர்க்., பிரிவில், கேரளாவைச் சேர்ந்த சூர்யாதேஜஸ்; பி.பிளான்., பிரிவில், கவுரிசங்கர் ஆகியோர், 100 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.பி.ஆர்க்., பிரிவில், தமிழகத்தை சேர்ந்த சுஷில் நாராயணசாமி, 99.99 மதிப்பெண்களுடன், தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.அதே போல், பி.பிளான்., பிரிவில், தமிழகத்தை சேர்ந்த யஷ்வந்த் மகேந்திரன் 99.98 மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளார். மாணவர்கள், தேர்வு முடிவுகளை, https://nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.