தலைமை ஆசிரியர் பணி: முதல் நாளில் 471 பேர் தேர்வு
அரசு மேல்நிலை மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பணிபுரிவதற்கான கவுன்சிலிங், சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது. கவுன்சிலிங்கில் பங்கு பெறுவதற்காக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகுதி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் வந்திருந்தனர். பள்ளி கல்வித்துறை இயக்குனர் மணி மற்றும் இணை இயக்குனர்கள் பழனிசாமி, ராஜராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலையில், கவுன்சிலிங் நடைபெற்றது. பணிக் காலத்தை அடிப்படையாக கொண்டு, ஆசிரியர்கள் அனைவரும் வரிசைப்படுத்தப்பட்டனர். தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டிய பள்ளிகள் அனைத்தும் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு, அவை, அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டன. இதில் வரிசைப்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் மாவட்டம் மற்றும் பள்ளிகளை தேர்ந்தெடுத்தனர். அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு பணி உயர்வுக்கான ஆணையை இயக்குனர் மணி வழங்கினார். முதல் நாள் கவுன்சிலிங்கில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, 455 பேர், நகராட்சிப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, 16 பேர் என, மொத்தம், 471 பேருக்கு பணி உயர்வு வழங்கப்பட்டது. தொடர்ந்து, இன்று அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான கவுன்சிலிங் நடைபெறவுள்ளது.