காவலர் பணிக்கு உடல் தகுதி தேர்வில் 5575 பேர் பங்கேற்பு
சென்னை: காவல், சிறை, தீயணைப்பு துறைகளில் இரண்டாம் நிலை காவலர்களாக சேர்வதற்கான உடல் தகுதி தேர்வில் இளைஞர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.காவல், சிறை, தீயணைப்பு துறைகளுக்கு 3,359 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய உள்ளதாக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் கடந்த ஆக.8ல் அறிவித்தது. ஆன்லைன் வாயிலாக 41 திருநங்கையர் உட்பட 2 லட்சத்து 81,497 பேர் விண்ணப்பித்தனர்.இவர்களுக்கான எழுத்து தேர்வில் 83 சவீதம் பேர் பங்கேற்றனர். எழுத்து தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, தேர்ச்சி பெற்றோரில் உடல் தகுதி தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புக்கு 18,672 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இவர்களில் 3514 பேர் பெண்கள். இவர்களில் ஐந்து பேர் கர்ப்பிணியராக உள்ளனர். இவர்களுக்கு மகப்பேறு காலத்திற்கு பின் திருச்சியில் தனியாக உடல் தகுதி தேர்வு நடக்க உள்ளது.மற்றவர்களுக்கு மாநிலம் முழுதும் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் உட்பட 21 இடங்களில் வரும் 11ம் தேதி வரை உடல் தகுதி தேர்வு நடக்க உள்ளது. முதற்கட்டமாக 7583 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில் 5575 பேருக்கு உடல் தகுதி தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த உடல் தகுதி தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பில் 246 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கு ஆவடி சிறப்பு காவல் படை வளாகத்தில் உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.