உள்ளூர் செய்திகள்

எமிஸில் சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கு ஒப்புதல்: 60 பள்ளிகளுக்கு சி.இ.ஓ., எச்சரிக்கை

மதுரை: மதுரையில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான அரசின் 7.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீட்டிற்கு தகுதியுள்ள மாணவர்களுக்கு, அவர்கள் தமிழ் வழியில் படித்ததற்காக எமிஸில் ஒப்புதல் அளிக்கும் பணிகள் 60 பள்ளிகளில் பெண்டிங் உள்ளது. அவற்றை விரைவில் முடிக்க வேண்டும் என சி.இ.ஓ., கார்த்திகா உத்தரவிட்டார்.மாவட்ட அளவில் அரசு உயர், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இணையவழியில் நடந்தது. அதில் சி.இ.ஓ., பேசியதாவது: மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு உள்ளது. இதற்காக ஒன்று முதல் 5 வரை தொடக்க பள்ளிகளிலும், 6 முதல் பிளஸ் 2 வரை உயர், மேல்நிலை பள்ளிகளிலும் மாணவர்கள் தமிழில் படித்ததற்கான ஒப்புதல் எமிஸில் பதிவு செய்ய வேண்டும்.ஆனால் மாவட்டத்தில் 60 அரசு பள்ளிகளில் இப்பணிகள் நிலுவையில் உள்ளது. அவற்றை விரைவில் முடிக்க வேண்டும். கோடையில் வெப்ப அலை வீச உள்ளதால் விடுமுறை நாட்களில் மாணவர்கள் காலை 10:00 - மாலை 4:00 மணி வரை வெளியில் சுற்றுவதை தவிர்க்க உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் வகுப்பறை வசதி தேவை விவரம் குறித்து எமிஸில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.வரும் கல்வியாண்டு முதல் வகுப்பறையின்றி மாணவர்கள் மரத்தடியில் அமரும் சூழல் இருந்தால் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை நாட்களில் தலைமையாசிரியர்கள் தங்களின் அலைபேசியை சுவிட்ச் ஆப் செய்யக்கூடாது. பள்ளி, மாணவர்கள், நலத்திட்டம் தொடர்பாக விவரங்கள்எந்த நேரமும் உங்களிடம் கேட்கப்படும் என்றார். உதவித் திட்ட அலுவலர் சரவணமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்