அண்ணா பல்கலை சிகிச்சை முகாமில் போலீசாருக்கு 930 படுக்கை ஒதுக்கீடு
சென்னை: கடந்த ஆண்டு, ஐ.ஐ.டி., வளாக கொரோனா மையத்தில், போலீசாருக்கு மட்டும் இடம் ஒதுக்கியதால் ஏற்பட்ட சர்ச்சையையடுத்து, தற்போது, அண்ணா பல்கலை வளாக சிகிச்சை முகாமில், 930 படுக்கை, போலீசாருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.கொரோனா பரவலை தடுக்க, கடந்த ஆண்டு போல், சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கிண்டி மத்திய தொழில் பயிற்சி நிலையம், குருநானக் கல்லுாரி, ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை ஆகிய மையங்கள், அடையாறு மண்டலத்தில் உள்ளன. இவற்றில், குருநானக் கல்லுாரி, கிண்டி தொழில் பயிற்சி நிலையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஐ.ஐ.டி.,யில் உள்ள, 820 படுக்கையில், 400 படுக்கை நேற்று தயார் நிலையில் வைக்கப்பட்டது.அதேபோல், அண்ணா பல்கலையில், 1,500 படுக்கையில், 950 தயார் நிலையில் உள்ளது.கடந்த ஆண்டு, ஐ.ஐ.டி.,யில், போலீசார் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு, சிறப்பு சலுகை வழங்கியதாக, இதர அரசு துறை ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர். கொரோனா பாதித்த, மருத்துவமனை, மாநகராட்சி ஊழியர்களை, ஐ.ஐ.டி.,யில் சேர்க்க அனுமதி மறுத்து, நாவலுாருக்கு அனுப்பியதால் சர்ச்சை எழுந்தது.மேலும், ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள மான், குரங்குகளுக்கு, போலீசார் வெளி உணவுகளை வழங்கியதுடன், அவற்றுக்கு தொல்லை கொடுத்ததாக கூறி, மீண்டும் போலீசாருக்கு வழங்க, ஐ.ஐ.டி., நிர்வாகம் தயங்கி உள்ளது.இதனால், அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, 930 படுக்கைகள் போலீசாருக்கு, நேற்று ஒதுக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு, போலீசாருக்கு குறைவாகவும், பொதுமக்கள் மற்றும் இதர அரசு துறை ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்தால், போலீசாருக்கு ஒதுக்கிய படுக்கைகள் பயன்படுத்தப்படும் என்ற நிபர்ந்தனையுடன் வழங்கப்பட்டு உள்ளது.