உள்ளூர் செய்திகள்

எஸ்.ஆர்.எம். பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங் துவக்கம்

சென்னை காட்டாங்குளத்தூரில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம்., பல்கலையில், இன்ஜினியரிங் இளநிலை, முதுநிலை ஆகிய பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, ஏப்., 23 ல் நாடு முழுவதும் உள்ள 190 மையங்களில் நடந்தது. பி.டெக்., எம்.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய படிப்புக்களுக்கான தேர்வை மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகள் 8ம் தேதி வெளியானது. பி.டெக்., நுழைவுத்தேர்வில், முதல் 10 இடங்களை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெற்றனர். இவர்களின் படிப்பிற்கு பல்கலையே முழு செலவை ஏற்றுக்கொள்வதோடு, உதவித் தொகையாக மாதந்தோறும் தலா 1,000 ரூபாயும் வழங்குகிறது. பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் பல்கலை அரங்கத்தில் நடந்தது. பல்கலைவேந்தர் பச்சமுத்து கவுன்சிலிங்கை துவக்கி வைத்தார். துணைவேந்தர் சத்தியநாராயணன், முதன்மை கல்வி அலுவலர் பொன்னவைக்கோ ஆகியோர் பங்கேற்றனர். எம்.டெக்., எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., ஆகிய படிப்புகளுக்கு ஜூன் 17ல் கவுன்சிலிங் துவங்கி, 18 வரை நடக்கிறது. இது குறித்து பல்கலை வேந்தர் மற்றும் துணைவேந்தர் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: இங்கு கடந்தாண்டு துவங்கிய நியூக்ளியர் இன்ஜினியரிங் மற்றும் நானோ தொழில்நுட்ப படிப்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த ஆண்டில் 12.50 கோடி ரூபாய் வரை உதவித்தொகை வழங்கியுள்ளோம். இது தற்போது 15 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இங்கு படிப்பவர்களில், 50 சதவீதம் பேர் வெளிநாடுகளுக்கு பணிபுரிய செல்கின்றனர். வெளிநாட்டினர் இங்கு படிக்க ஆர்வமாக உள்ளனர். தற்போது 300 பேர் படித்து வருகின்றனர். அடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய், சீனா போன்ற நாடுகளை சேர்ந்த 800 பேர் படிக்கலாம் என எதிர்பார்க்கிறோம். இங்கு இரு ஆண்டுகள், வெளிநாட்டில் இரு ஆண்டுகள் படிக்கும் வாய்ப்பும் உள்ளது. இந்த முறையில் படித்த ஒரு மாணவர், அமெரிக்க எம்.ஐ.டி., பல்கலையில் சிறப்பிடம் பெற்றுள்ளார். இஸ்ரோ நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ள  செயற்கைக் கோளை ஆகஸ்ட் மாதம் செலுத்த முடிவெடுத்துள்ளோம். இதன் மாதிரியை இஸ்ரோ தலைவரும் பார்வையிட்டு திருப்தி தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்