கற்கும் பாரத திட்டத்தில் எழுத்தறிவு தேர்வு
கற்கும் பாரத திட்டத்தில் கல்வி பயின்ற பயனாளிகளுக்கு வரும் 20ம் தேதி அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடக்கிறது. இது குறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் 1,104 கற்கும் பாரத மையங்கள் உள்ளன. இங்கு படிக்கும் 1.82 லட்சம் பேருக்கு வரும் 20ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடக்கிறது. தேசிய எழுத்தறிவு முனைப்பு ஆணையகம், தேசிய திறந்த வெளி பள்ளியும் இணைந்து நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, தேசிய எழுத்தறிவு முனைப்பு ஆணையம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும். பள்ளி கல்வி திட்டத்தில் இடைநின்ற 15 வயதிற்கு மேற்பட்டவர்களும் தேர்வில் பங்கேற்கலாம். மாவட்டத்தில் கற்கும் பாரத திட்டத்தில் படித்தவர்களும், எழுத்தறிவு பெற்றவர்களும், 15 வயதிற்கு மேற்பட்ட பள்ளியில் இடைநின்றவர்களும் தேர்வில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு கலெக்டர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.