உள்ளூர் செய்திகள்

பின்தங்கிய பகுதிகளில் ஐ.டி.ஐ. அமைக்க கோரிக்கை

நலிந்த பிரிவினர், பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் மற்றும் படித்த இளைஞர்களிடையே வேலையில்லா திண்டாட்டத்தை போக்க, தமிழக அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள்(ஐ.டி.ஐ.,) மூலம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் பயிற்சிகளை வழங்கி வருகிறது. தொழிற் பயிற்சி நிலையங்களில், கார்பென்டர், மெக்கானிக், எலக்ட்ரீஷியன், ஒயர்மேன், தையல், எம்ராய்டரி, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஆறு மாதம் முதல் 3 ஆண்டு வரை தொழிற்பிரிவுக்கு ஏற்ப பயிற்சி காலம் நிர்ணயிக்கப்படுகிறது. தமிழகத்தில், 68 ஊராட்சி ஒன்றியங்களில், ஒரு தொழிற் பயிற்சி நிலையங்கள் கூட இல்லாத நிலை உள்ளது. நடப்பாண்டில் பத்து புதிய தொழிற் பயிற்சி நிலையங்கள் துவக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்னணு பாட முறை, பணிச் சூழல் மாதிரி அடிப்படையில் பயிற்சி, ஆண்டுதோறும் இரண்டு செட் சீருடை மற்றும் காலணி ஆகியவை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெயர் வெளியிடாத விரும்பாத உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதிதாக தொடங்கப்பட உள்ள தொழிற் பயிற்சி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு நிறுவப்பட உள்ளன. இதற்காக, அரசின் சார்பில், ஐந்து ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும். இயந்திரங்கள், தளவாடங்கள் போன்றவற்றை, தனியார் வாங்க ஏற்பாடு செய்யப்படும். பெரிய நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் பயிற்சியை, மாணவர்களுக்கு வழங்கலாம். மேலும், விமானம், கப்பல் கட்டுதல் போன்ற உலகத்தரம் வாய்ந்த பயிற்சியும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிலையில், புதிதாக துவங்கப்படும் தொழிற் பயிற்சி நிலையங்களை, மலைவாழ் மற்றும் சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைக் கண்டறிந்து, அந்தந்த பகுதி மக்களுக்கு ஏற்ப, பயிற்சி நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, தமிழக அரசு, மக்களின் கோரிக்கையை ஏற்று, பின்தங்கிய பகுதிகளில் புதிய தொழிற்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்த வேண்டும். மலைவாழ் இடங்களான தாரமங்கலம், கொல்லிமலை, உசிலம்பட்டி, கொட்டாம்பட்டி, கடலாடி, தளி, ராதாபுரம் ஆகிய பகுதிகளில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது, தர்மபுரி, திருவண்ணாமலை, திருவாரூர், விருதுநகர், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில், முறையே, ஒரு அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் உள்ளன. வேலூர், விழுப்புரம், திருப்பூர், கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தேனி, திருச்சி, நாகை, அரியலூர் மாவட்டங்களில் முறையே, இரண்டு தொழிற் பயிற்சி நிலையங்கள் உள்ளன. திருவள்ளூர், தூத்துக்குடி, வேலூர், கடலூர், ராமநாதபுரம், சேலம், மதுரை மாவட்டங்களில் முறையே மூன்றும், சென்னை, நெல்லையில் நான்கு தொழிற் பயிற்சி மையங்கள் என தமிழகம் முழுவதும் மொத்தம் 62 தொழிற் பயிற்சி நிலையங்கள் அரசுக்கு சொந்தமாக உள்ளன. இதில், 12 தொழிற் பயிற்சி மையங்கள் பெண்களுக்கு தனியாக உள்ளன. எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்களுக்கு தலா ஒரு தொழிற் பயிற்சி நிலையங்கள் உள்ளன. இவை தவிர, தமிழகத்தில் தனியாருக்கு சொந்தமான 627 பயிற்சி நிலையங்கள் செயல்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்