‘உலகத்தர பல்கலையில் அரசு தலையீடு கூடாது’
புதுடில்லி: இந்தியாவில் அமையவிருக்கும் உலக தரத்திலான 14 பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் நியமனத்தில் அரசு தலையீடு இருக்ககூடாது என தேசிய அறிவுசார் கழகம் பரிந்துரை செய்துள்ளது. உலக தரத்திலான மத்திய பல்கலைக்கழகங்கள் புனே, கோல்கட்டா, கோயமுத்தூர், மைசூர், விசாகப்பட்டினம், காந்திநகர், ஜெய்ப்பூர், பாட்னா, போபால், கொச்சி, அமிர்தசரஸ், புவனேஸ்வர், கவுகாத்தி, நொய்டா ஆகிய இடங்களில் அமையவிருக்கிறது. இந்த பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர் நியமனத்தில் அரசு தலையிடக்கூடாது. இந்த பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளித்து, பல்கலை நிர்வாகமே கட்டணங்களை நிர்ணயித்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என தேசிய அறிவுசார் கமிஷன், பல்கலைக்கழக மான்ய குழுவிற்கு சமீபத்தில் பரிந்துரை செய்து இருந்தது. இதுதொடர்பாக யு.ஜி.சி.,க்கு தேசிய அறிவுசார் கமிஷன் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘அமைய விருக்கும் 14 பல்கலைக்கழகங்களின் செயல்பாடு குறித்து வரைவு அறிக்கை தயாரித்து, அவைகள் தன்னாட்சி அதிகாரத்துடன் மாணவர்களுக்கான கட்டண நிர்ணயிப்பது, தொழில்துறை மற்றும் வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறுவதற்கு அதிகாரம் அளிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளது. மேலும் அறிவுசார் கழகத் தலைவர் சாம்பிட்ரோடா, ‘இப்பல்கலைக் கழகங்கள் ஒவ்வொன்றிலும் பல்வேறு துறைகளின் மீது கூறப்படும் புகார்களை விசாரிக்க ‘ஆம்புட்ஸ்மேன்’ அமைப்பு தேவை’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.