உள்ளூர் செய்திகள்

விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாட சில ஆலோசனைகள்

ஒவ்வொரு தீபாவளியின் போதும், தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையில் விபத்து நேரிட்ட செய்திகளைப் படிக்கையில் நெஞ்சம் பதறுகிறது. விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவது பற்றி தீயணைப்புத்துறை ஒவ்வொரு முறையும் அறிவுறுத்துகிறது. அந்த பொதுவான அம்சங்களைக் கடைபிடித்தால் நாமும் விபத்தில்லாத, மகிழ்ச்சிகரமான தீபாவளியைக் கொண்டாடலாம். குழந்தைகளுக்குப் பட்டாசு வாங்கிக் கொடுப்பதில் தவறில்லை. ஆனால், பெரியவர்களின் மேற்பார்வையில்தான் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும். பக்கெட்டில் தண்ணீர், மணல் தயாராக வைத்துக் கொண்டு பட்டாசு வெடிக்கத் துவங்குங்கள். இதில் அலட்சியம் வேண்டாம். பட்டாசுத் திரியைக் கொளுத்துவதற்காக நீண்ட ஊதுபத்திகள் விற்பனையாகின்றன. அவற்றைப் பயன்படுத்தி பக்கவாட்டில் வெடியைக் கொளுத்துங்கள். முகத்துக்கு நேரே வெடிப்பதைத் தவிருங்கள். எரிந்து முடிந்த பட்டாசு, மத்தாப்பு, ராக்கெட் ஆகியவற்றை தண்ணீர் பக்கெட் அல்லது உலர்ந்த மண்ணில் மூழ்கச் செய்யுங்கள். வெடிக்காத பட்டாசுகளைக் கையில் எடுக்க வேண்டாம். அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்போர், தரைத்தளத்தில்தான் வெடிக்க வேண்டும்; மாடியில் பட்டாசு வெடிப்பது தவறு. சிறு குழந்தைகள் அபாயகரமான பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதிக்காதீர். பூந்தொட்டி, சங்கு சக்கரம், ராக்கெட் பட்டாசுகளைக் கையில் வைத்து வெடிக்கக் கூடாது. சிம்னி இல்லாத விளக்குகள் மூலம் பட்டாசு வெடிக்கக்கூடாது. கம்பி மத்தாப்புகளைத் தள்ளி நின்று எரிய விட வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது நைலான், சில்க் துணிகளைத் தவிர்த்து, பருத்தி ஆடைகளை அணிவது நலம். இரவு 10.00 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்கக் கூடாது. பட்டாசுக்கடைகள், காஸ் கிடங்குகள், உணவுப் பொருள் சேமிப்புக் கிடங்கு, வைக்கோல் போர், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க், மின்சார டிரான்ஸ்பார்மர், மார்க்கெட், குடிசைகள், எளிதில் தீப்பற்ற வாய்ப்புள்ள பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது. பரந்த மைதானத்தில்தான் ராக்கெட் போன்ற உயரே செல்லும் வெடிகளை வெடிக்க வேண்டும். ஆடையில் தீப்பற்றினால், பதற்றம் கூடாது; ஓடாமல் தரையில் படுத்து உருள வேண்டும். தீப்புண்கள் ஏற்பட்டால் குளிர்ந்த நீர் ஊற்றி மெல்லிய துணியால் மூடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். தீக்காயங்களின் மீது அழுத்தித் துடைக்கக் கூடாது. இங்க், ஆயில், மண்ணெண்ணெய் போன்றவற்றை ஊற்றக் கூடாது. இந்த ஆலோசனைகளைப் பின்பற்றினால், விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்