கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்களில் நீர்தேங்கியுள்ளது. தீபாவளி திருநாளான புதன்கிழமையும் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இரவும் கன மழை நீடித்த காரணத்தால், சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, திருவாரூர், நெல்லை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போன்று புதுச்சேரியிலும் கன மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.