திருத்தப்பட்ட பாடப் புத்தகங்கள் ஜனவரியில் தயார்
சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் உள்ள பிழைகளை நீக்கி, புத்தகங்களின் தரத்தை உயர்த்துதல் மற்றும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களில், செய்முறை பாடத்திட்டங்கள் சேர்த்தல் ஆகிய பணிகள், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தின் மேற்பார்வையில் நடந்து வருகிறது. இத்திட்டத்தின் தற்போதைய நிலவரம் குறித்து, இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: பாடப் புத்தகங்களில் உள்ள பிழைகளை நீக்கி, சரியான வார்த்தைகளைச் சேர்த்தல் மற்றும் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு திட்டங்களைச் சேர்த்தல் தொடர்பான பணிகள் நடந்து வருகின்றன. இருபது ஆண்டு அனுபவம் வாய்ந்த, 40 ஆயிரம், அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு பாடம் சம்பந்தமான பணிகள், 32 மாவட்டங்களிலும் நடக்கின்றன. பெறப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து, ஆய்வு செய்து, பாட வாரியான திருத்த விவரங்களை, மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவன முதல்வர்கள் தயாரிப்பர். இது, பாடப் புத்தக தயாரிப்பு குழுவிடம் அளித்து, அவர்களின் ஒப்புதலைப் பெற்ற பின், பாடநூல் கழகத்திடம் அச்சடிக்க ஒப்படைக்கப்படும். அடுத்த கல்வியாண்டு முதல், ஒரு பாடப் புத்தகம், மூன்று பகுதிகளாக பிரித்து வழங்கப்பட உள்ளது. அதற்கேற்ப, ஒவ்வொரு பாடத்தையும் நாங்களே மூன்று பகுதிகளாக பிரித்து, பாடநூல் கழகத்திடம் வழங்கத் திட்டமிட்டுள்ளோம். பணிகள் அனைத்தும், ஜனவரிக்குள் முடிந்துவிடும். இவ்வாறு தேவராஜன் கூறினார்.