வரலாற்றுச் சின்னங்களை பாதுக்காக்க கருத்தரங்கில் வலியுறுத்தல்
சென்னை: இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை மற்றும் பெல்ஜியத்தை சேர்ந்த ஆன்சன் பார்மசூட்டிக்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் நிபுணர்களின் இரண்டு நாள் கருத்தரங்கம் செப்., 18ம் தேதி சென்னையில் துவங்கியது. தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அண்ணாமலை கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது:தமிழகத்தில் மகாபலிபுரம் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. அந்த இடத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில், நினைவுச் சின்னங்களை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கவும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. மகாபலிபுரம் பகுதியில் ஆண்டிற்கு 1 முதல் 2 மி.மீட்டர் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. நூறு ஆண்டுகளில் 70 சென்டி மீட்டர் வரை உயரலாம் என கருதப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமையானது தஞ்சை பெரியகோவில். இக்கோவில் கோபுர உச்சியில் அதிக எடை கொண்ட கல் எப்படி கொண்டு செல்லப்பட்டது என்பது ஆச்சரியமான விஷயம். அந்தக் கோவில் கட்டப்பட்ட இடத்திலிருந்து 60 கிலோ மீட்டர் சுற்றுப்புறத்தில் குவாரிகளே கிடையாது. வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க அந்த காலத்தில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போதுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும். தற்போது, நடக்கும் இரண்டு நாள் கருத்தரங்கம் அது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார். துவக்க விழாவில் தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் டாக்டர் சத்யபாமா பத்ரிநாத் வரவேற்றார். ரேமான்டு லேமெரி பாதுகாப்பு பன்னாட்டு மையத்தின் இயக்குனர் வேன்பேலன், ஆன்சன் பார்மசூட்டிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர் பாஸிலர்ஸ், சென்னை ஐ.ஐ.டி., நிறுவன பேராசிரியர் மேத்தீவ்ஸ், இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொது இணை இயக்குனர் கெலாட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.