சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து மாணவர்கள் உண்ணாவிரதம்
புளியங்குடி: புளியங்குடியில் கல்லூரி மாணவர்களை அவதூறாக பேசிய சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். புளியங்குடியை அடுத்த டி.என்.புதுக்குடியில் உள்ளது மனோ கல்லூரி. தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில் அப்பகுதியில் உண்ணாவிரதம் இருந்த மாணவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த புளியங்குடி சப்-இன்ஸ்பெக்டர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மீண்டும் நேற்று காலை சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உண்ணாவிரதம் துவக்கினர். ஏற்கனவே கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த மாணவர்களுக்கு வாசுதேவநல்லூர் தொகுதி முன்னாள் மதிமுக எம்.எல்.ஏ., சதன் திருமலைக்குமார், பாஜ., இ.கம்யூ, மா.கம்யூ மற்றும் பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முயன்ற நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் மாணவர்களை அவதூறாக பேசியதால் பெரும் பரபரப்பானது. நேற்று மாணவர்களுடன் புளியங்குடி டிஎஸ்பி வானுமாமலை பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பவம் குறித்து மாணவர்கள் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.