அகிலேஷ் யாதவுக்கு ஹார்வர்டு பல்கலை அழைப்பு
உத்தர பிரதேசத்தின், அலகாபாத் நகரின், கங்கை நதிக்கரையில், ஜனவரி, 14ம் தேதி துவங்கிய, மகா கும்பமேளா, புனித நீராடல் நிகழ்ச்சி, இம்மாதம், 10ம் தேதி நிறைவடைந்தது. 55 நாட்கள் நடந்த இந்த புனித நிகழ்ச்சியில், எட்டு கோடிக்கும் மேற்பட்டவர்கள் நீராடி, வழிபாடு செய்துள்ளனர். உலகமே வியக்கும் அளவுக்கு விமரிசையான ஏற்பாடுகளை செய்திருந்த, மகா கும்பமேளா குழுவினர், அந்த அமைப்பிற்கு ஆலோசனை வழங்கிய, உத்தர பிரதேச முதல்வர், அகிலேஷ் யாதவுக்கு, பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன.கும்பமேளா நடைபெற்று கொண்டிருந்த போது, அமெரிக்காவின், ஹார்வர்டு பல்கலைக்கழகக் குழுவினர், அலகாபாத் வந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு, சுகாதார வசதி, தற்காலிக தங்கும் வசதி, நோய் தடுப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை ஆராய, 50க்கும் மேற்பட்ட பல துறை ஆராய்ச்சியாளர்கள், அந்த பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருந்தனர். இந்நிலையில், மகா கும்பமேளாவை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக, பல்கலைக் கழகத்தில் உரையாற்ற வருமாறு, உ.பி., முதல்வர், அகிலேஷ், கும்பமேளா ஏற்பாடுகளை கவனித்துக் கொண்ட, நகர்புற அபிவிருத்தி துறை அமைச்சர், அசம் கான் ஆகியோருக்கு, ஹார்வர்டு பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது. அடுத்த மாதம், 25ம் தேதி, அகிலேஷ் மற்றும் அசம் கான், ஹார்வர்டு பல்கலையில் உரையாற்ற உள்ளனர்.