உள்ளூர் செய்திகள்

நேர்மையை கடைப்பிடித்தால் முன்னேறலாம்: தினமலர் ஆசிரியர்

சென்னையில் பிளஸ் 2 மாணவர்களுக்காக நடந்த ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியில், ‘தினமலர்’ நாளிதழ் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக நடத்தி வருகிறோம். இந்நிகழ்ச்சி, வசதியற்ற மாணவ, மாணவிகள் பயன் பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு தான் நடத்தப்படுகிறது. சிறந்த ஆசிரியர்கள் மூலமாக தேர்வில் வெற்றி பெற ஆலோசனை வழங்கப்படுகிறது. சிறு வயதில் எனக்கு இது போன்ற வாய்ப்புகள் கிடைக்கவில்லை. உங்களுக்கு கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை, நீங்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவ, மாணவிகள் நன்றாக தேர்வு எழுதுவதற்கும், படிப்பதற்கும் வசதியாக, ‘புளூ பிரின்ட்’ கொடுக்கிறோம். வசதியற்ற மாணவ, மாணவிகளால், ‘டியூசன்’ வைத்து படிக்க முடியாது. இயற்பியல், கணக்கு பாடங்களை ஆசிரியர்கள் சிறப்பாக நடத்தினர். தேர்வில் ஒரு மார்க் கூட குறைந்து விடக்கூடாது என்றும் பாடங்களை சிறப்பாக நடத்தினர். மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் குறிப்பு எடுத்தனர். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியது போல பிளஸ் 2 தேர்வு, மாணவ, மாணவிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. எனவே, மாணவ, மாணவிகள் கவனமாக படிக்க வேண்டும். கடந்த ஆண்டு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி பேசும் போது, ‘நான் தினமும் 7 மணி நேரம் படிப்பேன்’ என்றார். மாணவர் பேசும் போது, ‘பள்ளி நேரம் போக 6 மணி நேரம் படிப்பேன்’ என்றார். கணக்கு பாடத்தில் மாணவ, மாணவிகள் 100க்கு 100 எடுக்க வேண்டும். இயற்பியல், வேதியியல் பாடத்திலும் நல்ல மார்க் எடுக்க வேண்டும். கடந்த ஆண்டில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. கூட்டத்தைக் கண்டு அப்துல் கலாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பத்திரிக்கை ஆசிரியர் என்ற முறையில் அப்துல் கலாமுடன் நான் பல வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளேன். கடந்த 2004ம் ஆண்டில் ரஷ்ய நாட்டிற்கு முதலில் சென்றார். பிறகு, சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சென்றார். அங்குள்ள ஸுரிக் பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அப்துல் கலாம் உரையாற்றினார். பிறகு, மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, அங்கிருந்த இந்திய மாணவர் ஒருவர் அப்துல் கலாமிடம், ‘இந்தியா ஒரு ஏழை நாடு; சந்திர மண்டலத்திற்கு மனிதனை அனுப்ப பல ஆயிரம் கோடி ரூபாய் ஏன் செலவு செய்ய வேண்டும்’ என கேள்வி எழுப்பினார். அதற்கு அப்துல் கலாம் கூறுகையில், ‘இந்தியாவில் மின்சார உற்பத்தி செய்ய எரிசக்தி குறைவாக உள்ளது. மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி இன்னும் 50 ஆண்டுகளுக்குத் தான் வரும். எண்ணெய் வளமும் நம் நாட்டில் மிகக் குறைவு. மின்சாரத் தேவை அதிகரித்துக் கொண்டிருப்பதால் மாற்று எரிபொருள் தேவை. சந்திர மண்டலத்தில் ஹுலியம் 3 ஐசோடோப் அதிகமாக உள்ளது. அவற்றை எடுப்பதற்காகத் தான் மனிதனை அனுப்பி வைக்கும் திட்டம் உள்ளது. அதைப் பயன்படுத்தி, அளவில்லாத மின்சாரம் உற்பத்தி செய்யலாம்’ என்றார். இந்தியா எந்த அளவுக்கு முன்னேறுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். மாணவர்கள் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடிக்க வேண்டும். ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். அப்போது, வாழ்க்கையில் நிச்சயமாக முன்னேற முடியும்; வெற்றி பெற முடியும். இவ்வாறு ‘தினமலர்’ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்