தாமதம், இடையூறு இன்றி விண்வெளி ‘இன்டர்நெட்’
நியூயார்க்: விண்வெளியில் உள்ள தொலைதூர பகுதிகளுக்கான, இன்டர்நெட் செயல்பாட்டை, ‘நாசா’ நிறுவனம் வெற்றிகரமாக பரிசோதித்தது. கிரகங்களுக்கு இடையே தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், விண்வெளியில் உள்ள தொலைதூர பகுதிகளில் இருந்தும், விரைவாகவும், வேகமாகவும் தகவல்களை பெற உதவும், புதிய வகை இன்டர்நெட் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாட்டை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, ‘நாசா’ நவ. 19ம் தேதி வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தது. கலிபோர்னியாவில் உள்ள நாசா நிறுவனத்தின் ஜெட் புரபல்சன் ஆய்வக பொறியாளர்கள், ‘டிஸ்ரப்சன் டாலரண்ட் நெட்வொர்க்கிங்’ என்ற சாப்ட்வேரை பயன்படுத்தி, இந்த சோதனையை மேற்கொண்டனர். விண்வெளியில் பூமியில் இருந்து இரண்டு கோடி மைல் தொலைவில் உள்ள, ‘நாசா’வின் அறிவியல் விண்கலத்தில் இருந்து ஏராளமான படங்களை பூமிக்கு பெற்றும், இங்கிருந்து பல தகவல்களை அந்த விண்கலத்திற்கு அனுப்பியும் பரிசோதனை செய்தனர். இதில், ‘டீப் ஸ்பேஸ் இன்டர்நெட்’ சிறப்பாக செயல்படுவது உறுதி செய்யப்பட்டது. இதற்கான சாப்ட்வேரை உருவாக்கும் பணியில், கலிபோர்னியா, மவுன்டெய்ன் வியூவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் வின்ட்செர்ப்பும், நாசா நிறுவனமும் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டிருந்தன. அதில் தற்போது வெற்றி கிடைத்துள்ளது. ‘டிஸ்ரப்சன் டாலரண்ட் நெட்வொர்க்கிங்’ சாப்ட்வேர், வழக்கமான இன்டர்நெட் முறையில் மாறுபட்ட முறையில் செயல்படுகிறது. தாமதம், இடையூறுகள், துண்டிப்பு போன்றவை இல்லாமல், திறமையாக செயல்படும்.