மாற்றுத் திறனாளி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம்
கோட்டூர்புரம்: பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு கோரி மாற்று திறனாளி மாணவர்கள் நேற்று ஏழாவது நாளாக போரட்டம் நடத்தினர். இந்த போராட்டம் பெரும் கைகலப்பாக மாறியது. பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்று திறனாளிகள் போராடி வருகின்றனர். இதற்காக நேற்று காலை ராஜிவ் காந்தி சாலை மத்திய கைலாஷில் பேராட்டம் நடுத்துவதாக திட்டமிட்டனர். இதனால், இந்தப்பகுதியில் 250 போலீசார் வரை குவிக்கப்பட்டனர். பின்னர், கோட்டுர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குள் 30க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் நுழைந்தனர். பின்னர், கோட்டூர்புரம் சாலையிலும் அமர்ந்தனர். இதனால், அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்காத காவல்துறையினர் சிறிது நேரம் கழித்து கோட்டூர்புரம் நூலகத்திற்குள் நுழைந்தனர். மாற்று திறனாளிகளை பலவந்தமாக பிடித்து போலீஸ் பேருந்தில் ஏற்றினர். இதில் போலீசார் மாற்று திறனாளிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பேரூந்து உள்ளே திணிக்கப்பட்ட சிலர், ஓட்டுநர் இருக்கையின் அருகில் சென்று, அங்கிருந்த ஒயர்களை அறுத்துவிட்டனர். இதனால், பேரூந்து ஸ்டார்ட் ஆகவில்லை. இதற்கிடையில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கும் பேரூந்தை திறந்து வெளியே வர முயற்சித்தனர். இதனால், பெரும் பதட்டமடைந்த போலீசார் ஒருவழியாக பேரூந்தை தள்ளி ஸ்டார்ட் செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும், கோட்டுர்புரம் சமுகக் கூடத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னர், விடுவிக்கப்பட்டனர்.