சிவில் சர்வீஸ் தேர்வில் புதிய பாடத்திட்டம்?
வீரப்ப மொய்லி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது நிர்வாக சீர்திருத்தக் குழு மத்திய அரசிடம் அறிக்கை சமர்பித்துள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சி நிறுவனங்கள் ஆங்காங்கே காளான் போல் முளைத்துள்ளன. சரியான பாடத்திட்டங்கள் இல்லாததே இதற்குக் காரணம். எனவே, பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை பாடத்திட்டங்களை உயர் கல்வியில் உருவாக்க வேண்டும். தேசிய பொது நிர்வாக கல்வி நிலையத்தை உருவாக்கி, இளங்கலைப் பட்டப்படிப்பை ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் மற்ற பல்கலைக்கழகங்களிலும், சிறந்த பயிற்சி மையங்களிலும் பொது நிர்வாக பாடத்திட்டங்களைச் செயல்படுத்த உதவி செய்ய வேண்டும். நீண்ட காலமாக இதுபோன்ற சிறந்த தனியார் மையங்கள், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பெரும் பங்கு வகித்துள்ளன. மற்ற பாடத்திட்டத்தில் படித்தவர்களும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் வகையில் பொது நிர்வாக கல்வியில், ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ அறிமுகப்படுத்த வேண்டும். இதுபோன்ற திட்டங்களுடன் 377 பக்க அறிக்கையை வீரப்ப மொய்லி கமிட்டி தாக்கல் செய்துள்ளது.