உள்ளூர் செய்திகள்

நீதித்துறைக்கு தமிழ் அகராதி: நீதிபதி வேண்டுகோள்

காலத்தில் நீதி வழங்குவதற்கான வழிமுறை குறித்த பயிற்சி பட்டறை நிறைவு நிகழ்ச்சி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. திருச்சி மண்டல அளவிலான பயிற்சி பட்டறையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மாஜிஸ்திரேட் மற்றும் நீதிபதிகள் 60 பேர் பங்கேற்றனர். விழாவில், ஐகோர்ட்  நீதிபதி சந்துரு பேசியதாவது:தமிழுக்கும், நீதிக்கும் என்ன பிணக்கு எனத் தெரியவில்லை. நீதிமுறைகள் கூறும் நூல்கள் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் பல உள்ளன. தமிழ் சார்ந்த நீதி கூறும் நூல்கள், சட்டரீதியாக தொகுக்க வேண்டும். நீதிமன்ற மொழியாக தமிழ் ஏற்கப்பட வேண்டுமென முயற்சி நடக்கிறது.தமிழில் தீர்ப்புகள் வழங்கும் வகையிலான சட்டச்சொற்கள் உருவாக்க வேண்டும். தமிழில் சட்ட ரீதியான உள்கட்டமைப்பு, மென்பொருள் தயாரிக்க வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழகம் அச்செயல்பாட்டில் இறங்கினால், நீதித்துறை அதற்கு உதவத் தயாராக உள்ளது. தமிழ் தொடர்பான நீதி நூல்களை தொகுக்க வேண்டும். இதன்மூலம் நீதித்துறைக்கு போதுமான தகவல்கள் கிடைக்கும். சட்டம், நீதித்துறை சார்ந்த புதிய அகராதி உருவாக்கும் பணியை தமிழ்ப் பல்கலைக்கழகம் மேற்கொள்ள வேண்டும் என்று சந்துரு கேட்டுக் கொண்டார்.ஐகோர்ட் நீதிபதி மிஸ்ரா பேசியதாவது: இது போன்ற பயிற்சிக்கு பின் நீதிபதிகள் தங்களது வழக்குகளை மேலும் 10 சதவீதம் கூடுதலாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும். வழக்குகள் அதிகமாக இருக்க காரணம் கோர்ட்டுகள் வழக்குகளை ஒத்திவைப்பதனால் அல்ல. மக்கள் தொகை அதிகரிப்பதால் தான் வழக்குகள் அதிகம் உள்ளன. அதை குறைக்க நீதித்துறையில் உள்ளவர்கள் கூடுதல் முயற்சிகளும், கூடுதல் பணியாட்களையும் எடுத்து முடிக்க வேண்டும். நீதிமன்ற மொழியாக தமிழை மட்டுமே கொண்டு வர வேண்டும் என்பது சரியானதா என்பதை யோசிக்க வேண்டும். நான் புதிய சர்ச்சையை ஏற்படுத்த விரும்பவில்லை. இருப்பினும், இது யோசனைக்குரியது என்றார் மிஸ்ரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்