மாநில கல்லூரி மாணவர் பேரவையினர் உண்ணாவிரதம்
சேப்பாக்கம்: சென்னை மாநில கல்லூரி மாணவர் பேரவையினர் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மாநில கல்லூரியில் இருந்து 15 மாணவர்களை, நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று கல்லூரி வளாகத்தில் உண்ணாவிரதம் நடந்தது. அதில் 20க்கும் மேற்பட்ட மாணவர் பேரவையினரும், சில பெற்றோரும் கலந்து கொண்டனர். மாணவர்கள் கூறுகையில், ’எந்த சான்றும் இல்லாமல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மாணவர்களை கைது செய்து, போலீசார் பொய் வழக்குகளை போட்டுள்ளனர். கல்லூரி நிர்வாகமும், மாணவர்களை நீக்கியுள்ளது. இதனால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. உடனே அவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்’ என்றனர். இதுகுறித்து, மாநில கல்லூரி முதல்வர், பிரம்மானந்த பெருமாள் கூறுகையில், ”கல்லூரியின் முன்னாள் முதல்வர், முகமது இப்ராகிமுக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு மாணவர்களும், கல்லூரி வளாகத்தில், பயங்கர ஆயுதங்களை கொண்டு ஒரு மாணவரை கொலை செய்ய முயன்றதாக 13 மாணவர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டு தமிழக அரசின் ஆணைக்கிணங்க, ஒழுங்கு நடவடிக்கையாக அவர்களை கல்லூரியில் இருந்து நீக்கியுள்ளோம். இதில், அரசின் உத்தரவின்றி எங்களால் எதுவும் செய்ய இயலாது,” என்றார்.