கராத்தேயில் சாதிக்கும் ஒரே குடும்பத்து குழந்தைகள்!
கோவை: கராத்தே போட்டியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர், தொடர்ந்து பதக்கங்களை பெற்று, வீட்டுக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். சமீபத்தில், கோவை கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், ஆசிய அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில், கோவையை சேர்ந்த வீரர்கள் பலர் சாதித்தாலும், கட்டா, குமிட்டே பிரிவுகளில், திறமையை வெளிப்படுத்திய அமலா, விஜய், அஜய் ஆகியோரை சந்தித்து விபரம் கேட்டபோது தான் தெரிந்தது, மூவரும் ஒரே ரத்தம் என்று. காரணம், இவரின் தந்தை ராஜா, கராத்தே வீரராக இருப்பது. கோவை சுந்தராபுரத்தில் உள்ள இவர்களது வீட்டுக்கு சென்ற போது, இவர்களுக்கு அடுத்தபடியாக நம்மை வரவேற்றது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த பதக்கங்கள்தான். இதற்காகவே தனி அறை கட்டி வைத்தது போல் உணர வைத்தது. சுந்தராபுரத்தில் உள்ளஸ்ரீ விஸ்வேஸ்வரா வித்யாலயா மெட்ரிக்., பள்ளியில், அமலா, பிளஸ் 2, விஜய், பத்தாம் வகுப்பு, அஜய், எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த, 2007ம் ஆண்டு, திருச்சியில் நடந்த ஓபன் சாம்பியன் ஷிப், 2008ல், பொள்ளாச்சியில் நடந்த தேசியப் போட்டி, 2011ல், சேலத்தில் நடந்த தேசிய கராத்தே சாம்பியன் ஷிப், 2012ல், சுந்தராபுரம் செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில் நடந்த அகில இந்திய சாம்பியன் ஷிப் என, வெற்றி வாககை சூடியுள்ளனர். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடந்த ஆசிய அளவிலான கோஜிரியோ கராத்தே சாம்பியன் ஷிப் போட்டி, சென்னையில் நடந்த ஆனந்தன் கோப்பைக்கான தேசிய அளவிலான போட்டி ஆகியவற்றில், கட்டா, குமிட்டேவில், இவர்கள் மூவரும், அவர்களின் வயதுக்கு உட்பட்டு, எடைக்கு உட்பட்ட பிரிவில், தங்கப் பதக்கம் பெற்றுள்ளனர். இதில், விஜய், வரும் மே மாதம் மலேசியாவில் நடக்கும் சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்க உள்ளார். அமலா, விஜய், அஜய் ஆகியோர் கூறுகையில், "அப்பா கராத்தே வீரராக இருந்ததால், இயல்பில் இருந்தே கராத்தேவின் மீது ஒரு விருப்பம் ஏற்பட்டு விட்டது. தீவிர பயிற்சி எடுக்கவும், போட்டிகளில் சாதிக்கவும் எங்களுக்கு உறுதுணையாக இருந்தது. வீட்டில் இருக்கும் ஒத்துழைப்பை போல், பள்ளி நிர்வாகத்தினரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதால், அனைத்து போட்டிகளிலும் சாதிக்க ஒரு காரணமாக இருக்கிறது. சர்வதேச அளவில் பெயர் பெற வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம், என்றனர் மூவரும் ஒரே குரலாக.