பல்வேறு நோய்களுக்கான மூல காரணம் கோபமே!
கோபம்தான் பல்வேறு நோய்களுக்கும் மூலகாரணம். இதை புரிந்து கொள்ளாமல் தூக்கத்தை தொலைத்துவிட்டு பரிதவிக்க வேண்டியிருக்கிறது. இது மேலும் உடல் நலனை பாதிக்கிறது. எப்படி விடுபடுவது? * முதலில் வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே; கவலைப்படுவதற்கு இல்லை என்று நினையுங்கள். பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. * எல்லோரிடமும் அன்பாகப் பழகுங்கள். விட்டுக் கொடுத்து அனுசரித்துச் செல்லுங்கள். ஒருபோதும் பிறரைக் குறை சொல்லாதீர்கள். முடிந்தால் பிறருக்கு உதவி செய்யுங்கள். * உலகத்தைத் திருத்தப்போகும் தலைவனாக ஒருபோதும் நினைத்துக் கொள்ளாதீர்கள். பிறருக்கு வலியச் சென்று ஆலோசனை கூறுகிறேன் என்று வாங்கிக் கட்டிக் கொள்ளாதீர்கள். கேட்டால் மட்டும் சொல்லுங்கள். அதுவும் இது என்னுடைய கருத்து உங்களுக்கு உதவுமானால் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பேசுங்கள். * எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து, நல்லதையே நினைக்க வேண்டும். * கஷ்டம் , நஷ்டம், இன்பம், துன்பம் ஆகியவை வாழ்வின் அங்கம். இது சுழற்சி வட்டம் போல மாறி, மாறி வந்துகொண்டுதான் இருக்கும். குழந்தையைப் போல மனம் இருந்தால் உங்களுக்கு துன்பம் இல்லை. * உங்கள் வழி நேர்மையாக இருந்தால் அந்த வழியிலேயே தொடர்ந்து செல்லுங்கள். உங்கள் முடிவே உங்களுக்கு நன்மை பயக்கும். * மாதுளை, சாத்துக்குடி, ஆரஞ்சு ஜூஸ், இளநீர் குடிப்பது கோபத்தை குறைக்க உதவும். * தினமும் குறைந்தது பத்து நிமிடங்களாவது தியானத்தில் அமருங்கள். குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் தியானம் செய்ய பழகும்போது மனம் எளிதில் வசப்படும். * எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பேன். அமைதியாக இருப்பேன் என்பது போன்று எண்ணத் தொடங்குங்கள். இவை ஆழ்மனதில் பதியப் பதிய டென்ஷனும், பரபரப்பும் குறைந்து நிம்மதி அடைவீர்கள். * இனிய இசை கேட்டல்; நம்பிக்கை தரும் நூல்களை வாசித்தல்; சிறிது நேரம் இயற்கையை ரசித்தல்; நண்பர்களுடன் உரையாடுதல்; குடும்பத்தாருடன் மனம்விட்டுப் பேசுதல்; குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடுதல் போன்றவை கோபத்தை குறைக்க உதவும்.