உள்ளூர் செய்திகள்

முதல்வர் திறந்த பள்ளி மூடப்பட்டிருக்கும் அவலம்!

காரைக்குடி: கானாடுகாத்தான் அருகே உள்ள ஏனாதிபட்டி பள்ளி ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், வகுப்பறை கட்டடம் கட்டி முடிக்கப்படாததால் மாணவர்கள் மரத்தடியிலும், அங்கன்வாடியிலும் படித்து வருகின்றனர்.கானாடுகாத்தான் அருகே உள்ள ஏனாதிபட்டி, பாந்தரங்காடு பகுதி மாணவர்கள் ஆரம்ப கல்வி பயில 3 கி.மீ., தூரம் உள்ள கொத்தமங்கலம், பழையூர் பகுதிக்கு செல்ல வேண்டியிருந்தது. இதை போக்கும் வகையில் கடந்த 2014 டிசம்பர் 10-ம் தேதி ஏனாதிபட்டியில் புதிய தொடக்க பள்ளி தொடங்க கல்வித்துறை உத்தரவிட்டது.  அதன்படி மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு, தற்போது 26 மாணவர்கள் படிக்கின்றனர். 2 ஆசிரியர்கள், ஒரு சமையல் உதவியாளர் உள்ளார். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 2 வகுப்பறை, குடிநீர் வசதியுடன் கூடிய கழிப்பறை கட்ட ரூ.14.96 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தலைமை ஆசிரியரின் மேற்பார்வையில் அந்தந்த கல்விக்குழு மூலம் கட்டடம் கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. அதே நேரத்தில் தொடங்கப்பட்ட குன்றக்குடி அருகே உள்ள சாலியில் கட்டடம் கட்டி கடந்த ஆறு மாதங்களாக வகுப்பு இயங்கி வரும் நிலையில், ஏனாதிபட்டி பள்ளி கட்டடம் இன்னமும் திறக்கப்படாமல் உள்ளது. கட்டடத்தின் முன்பு கொத்தமங்கலம் கண்மாய்க்கு செல்லும் ஓடை உள்ளது. மழை வந்தால் இந்த ஓடையை கடந்து மாணவர்கள் வகுப்பிற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பாலம், சுற்று சுவர் வசதியும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோரிடம் எழுந்துள்ளது. தற்போது இப்பள்ளியில் பயிலும் 26 மாணவர்களுக்கு, அங்கன்வாடி மையம், மர நிழலில் பாடம் சொல்லி கொடுக்கப்படுகிறது. இந்த கட்டடத்தை முதல்வர் ஜெ., திறந்து வைத்துள்ளார். அதற்கான கல்வெட்டும் பதிக்கப்பட்டுள்ளது. கான்ட்ராக்டர் செந்திலிடம் கேட்ட போது, பில் சமர்ப்பிக்க தாமதமாகி விட்டது. நாளைக்குள் பள்ளியை திறந்து பயன்பாட்டுக்கு கொடுத்து விடுவோம், என்றார். அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் இதை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்காதது ஏனோ? 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்