உள்ளூர் செய்திகள்

’மவுத் கார்விங்’ கலையில் மாணவர் சாதனை

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை எம்.பி.ஏ., மாணவர் சக்திவேல், வாய் நுனியில் கத்தியை வைத்து இரண்டு மணி நேரத்தில் 240 பப்பாளிகளில் 240 வகையான மனித முகபாவங்கள் செதுக்கி (மவுத் கார்விங்) சாதனை படைத்தார். காய் கனி சிற்பக்கலைகளில் ஒன்றான வாய் நுனியில் கத்தியை வைத்து சிற்பம் செதுக்கும் மவுத் கார்விங் கலை தாய்லாந்தில் பிரபலம். இந்தியாவில் இது பிரபலமாகி வருகிறது. இக்கலையால் ஈர்க்கப்பட்ட சக்தி வேல், மவுத் கார்விங் முறையில் பப்பாளியில் மனித முகபாவங்களை செதுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதில் சாதனை படைக்க பயிற்சி எடுத்தார். பல்கலையில் ஸ்டார் ஓட்டல் ஷெப்கள் மற்றும் பல்கலை அதிகாரிகள் முன்னிலையில், 2015 செப்.,29ல் வாயில் கத்தியை வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக 2 மணிநேரத்தில், 240 பப்பாளிகளில் (500 கிலோ) 240 வகை மனித முகபாவங்களை செதுக்கி சாதனை நிகழ்த்தினார். இதன் வீடியோ பதிவு, உலக சாதனைகளை அங்கீகரிக்கும் அமைப்புகளில் ஒன்றான புதுச்சேரியில் உள்ள அஸ்சிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்விற்கு பின் சக்திவேலின் முயற்சியை உலக சாதனையாக அங்கீகரித்து அந்த அமைப்பு அறிவித்துள்ளது. சக்திவேல் கூறியதாவது: இளஞ்செழியன் என்பவர் வாயில் கத்தியை வைத்து தர்பூசணியில் 2.12 நிமிடங்களில் (பாஸ்டஸ்ட் மவுத் கார்விங்) பூ வடிவம் செதுக்கியது உலக சாதனையாக உள்ளது. ஆனால், வாயில் 2 மணிநேரம் தொடர்ந்து கத்தியை வைத்து பழத்தில் சிற்பம் செதுக்கியதில் இதுதான் உலக சாதனையாக உள்ளது. இதற்காக ஆறு மாதங்கள் கடுமையாக பயிற்சி எடுத்தேன். தொடர்ந்து 2 மணிநேரம் வாயில் பல் நுனியில் கத்தியை வைத்திருப்பதால் வாய், தொண்டை வலி ஏற்பட்டது. அதையெல்லாம் தாங்கிக்கொண்டு இந்த சாதனை செய்தேன். தற்போது திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் ஓட்டல்களில் காய்கனி சிற்பங்கள் அமைத்து வருகிறேன். மவுத் கார்விங் மூலம் மெகா கண்காட்சி அமைக்க திட்டமிட்டுள்ளேன், என்றார்.இவரை, 88077 65652ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்