ஆயிரம் ஓவிய ஆசிரியர்களுக்கு பயிற்சி: இறையன்பு
சென்னை: “ஓவிய ஆசிரியர்கள் 1,000 பேருக்கு நடப்பு கல்வியாண்டில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என சுற்றுலாத் துறைச் செயலர் இறையன்பு தெரிவித்தார். சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத் துறை சார்பில், சென்னையில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரியில், பள்ளி ஓவிய ஆசிரியர்களுக்கு 10 நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதன் நிறைவு விழா ஜூலை 29ம் தேதி நடந்தது. இதில், சுற்றுலாத் துறைச் செயலர் இறையன்பு பேசுகையில், “மனிதனின் அழகுணர்வை வெளிப்படுத்துவது கலை; கலை இல்லாமல் உலகம் இல்லை. பள்ளி மாணவர்களுக்கு ஓவியத்தை கற்றுத் தருவதோடு, இந்தத் துறை சார்ந்த பிரபல மானவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் எடுத்துக் கூற வேண்டும். நடப்பாண்டில் 1,000 ஓவிய ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். பயிற்சி பெற்ற ஓவிய ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை இறையன்பு வழங்கினார். விழாவில், பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமி, சுற்றுலாத் துறை மேலாண் இயக்குனர் மோகன்தாஸ், கல்லூரி முதல்வர் மனோகர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.