உள்ளூர் செய்திகள்

வெள்ளி விழா காணும் லக்னோ ஐ.ஐ.எம்.,

லக்னோவிலுள்ள ஐ.ஐ.எம்., நிறுவனம் சமீபத்தில் தனது வெள்ளி விழாவைக் கொண்டாடியுள்ளது. இதில் முன்னாள் ஐ.ஐ.எம்., நிர்வாகக் குழு கவர்னராக இருந்த ஜே.கே. நிறுவன தலைவர் ஹரிசங்கர் சிங்கானியா கலந்து கொண்டார். இதன் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். 1984ம் ஆண்டில் வாடகைக் கட்டடம் ஒன்றில் துவங்கப்பட்ட லக்னோ ஐ.ஐ.எம்., நிறுவனம் தற்போது உலகப் புகழ் பெற்ற நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. கார்ப்பரேட், கார்ப்பரேட் அல்லாத பொது அமைப்புகளை மேலாண்மைத் திறனில் மேம்படுத்தும் நோக்கத்தோடு துவங்கப் பட்ட இந்த ஐ.ஐ.எம்., தனது லட்சியத்தை கணிசமாக எட்டியுள்ளது என்றே கூறலாம். மேலும் நாட்டின் முன்னணி கல்வி நிறுவனமாகவும் உருவெடுத்துள்ளது. 2001ம் ஆண்டு முதல் இதில் படித்து முடிப்பவர்களுக்கு 100 சதவீத வேலை வாய்ப்பு கிடைத்திருப்பது மற்றொரு சாதனை. 2005ம் ஆண்டு முதல் விவசாய மேலாண்மைப் படிப்புகளையும் இந்த ஐ.ஐ.எம்., தந்து வருகிறது. இதில் படித்திருக்கும் பலரும் நாட்டின் பல்வேறு துறைகளின் ஆய்வு மற்றும் ஆலோசனை திட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நொய்டாவில் கூடுதலாக ஒரு வளாகத்தைத் துவங்கி முழுக்க முழுக்க எக்சிகியூடிவ் கல்வி முறைக்கு இந்த ஐ.ஐ.எம்., வித்திட்டிருக்கிறது. இதன் நொய்டா வளாகத்தில் வேலை பார்க்கும் அதிகாரிகளுக்கான படிப்பு, பன்னாட்டு மேலாண்மைப் படிப்பு தரப்படுகின்றன. லக்னோ ஐ.ஐ.எம்., ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலுள்ள 22 கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்