உள்ளூர் செய்திகள்

தற்காலிக தட்டச்சர், வேலை இழக்கும் அபாயம்

இதனால், வரும் 30ம் தேதி நடக்கும் டி.என்.பி.எஸ்.சி., சிறப்பு போட்டித் தேர்வில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை தற்காலிக பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசுத் துறைகளில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணியிடங்கள் ஏராளமாக காலியாக இருந்தன. இதையடுத்து, 2006ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணியிடங்களை நிரப்புவது பற்றி அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் 3,500 பேரை தேர்வு செய்து காலியாகவுள்ள தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணியிடங்களில் தற்காலிகமாக நியமனம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டது. இதையடுத்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் தகுதி வாய்ந்த 3,500 பேர் தேர்வு செய்யப்பட்டு தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில், 2008ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., மூலம் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் தேர்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு துறையின் சார்பிலும் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கு ஆட்கள் வேண்டி கொடுக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் 3,500 பேரை தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தியது. இந்த தேர்வில் முன்னர் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர்களும் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், தற்காலிக தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர்கள் 300 பேர் மட்டுமே இந்த போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்வெழுதினர். இந்த தேர்வு முடிவுகள் அனைத்தும் வெளியிடப்பட்டு தற்போது ஆங்காங்கே தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்காலிகமாக பணியாற்றி வரும் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர்களை சிறப்பு போட்டித் தேர்வின் மூலம் நியமனம் செய்வது தொடர்பாக கடந்த மே 22ம் தேதி ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதில், அரசுத் துறைகளில் தற்காலிகமாக பணியாற்றி வரும் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர்களுக்கு ஆகஸ்ட் 30ம் தேதி சிறப்பு போட்டித் தேர்வு நடத்தப்படும். இந்த போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்படுவர். இதற்கு அந்தந்த துறைகளின் மூலம் ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் விண்ணப்பித்து விட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, தற்காலிக தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்தர்கள் சிறப்பு போட்டித் தேர்வுக்காக விண்ணப்பித்து கொண்டிருக்கின்றனர். டி.என்.பி.எஸ்.சி., மூலம் ஏற்கனவே போட்டித் தேர்வெழுதி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தற்போது அந்த துறைகளில் பணி அமர்த்தப்பட்டு வருவதால், தற்காலிக தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வரவிருக்கிற போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கல்வித் துறையில் தற்காலிகமாக பணியாற்றி வரும் தட்டச்சர் ஒருவர் கூறியதாவது: அரசுத் துறைகளில் தற்போது 3,500 தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை இந்த காலிப் பணியிடங்களில் நியமனம் செய்யலாம். ஆனால், தற்காலிக தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர்களை பணியிலிருந்து நீக்கி விட்டு அதே இடத்தில் டி.என்.பி. எஸ்.சி., மூலம் வருபவர்களை நியமிக்கின்றனர். இதனால் எங்களால் வரும் 30ம் தேதி போட்டித் தேர்வுக்கு விண்ணப் பிக்க முடியாத சூழ்நிலை ஏற் பட்டுள்ளது. காரணம், அந்தந்த துறைகளில் மூலம் மட்டுமே தற்காலிக தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர்கள் விண்ணப் பிக்க வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. பணியில் இருந்து நீக்கிவிட்டால் எங்களால் போட்டித் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்க முடியும். வேலை பறிபோய் விடுமோ என்ற பயத்திலேயே எங்களைப் போன்றவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்