உள்ளூர் செய்திகள்

வேலைதரும் கல்வி: புதிய துணைவேந்தர் உறுதி

பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான சுர்ஜித் சிங் பர்னாலா இதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளார்.சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த ராமச்சந்திரனின் பதவிக்காலம் செப்டம்பர் 5ம் தேதியுடன் முடிவடைந்தது. அதையடுத்து, சென்னைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக திருவாசகம் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தராக அக்., 13ம் தேதி காலை பொறுப்பேற்ற பின் பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறுகையில், “தனது பிள்ளைகள் நன்கு படித்து சிறந்த வேலையில் அமரவேண்டும் என்பதையே ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகின்றனர். அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வரும் ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகம் வேலைதரும் கல்வியை வழங்கும் என்பதை உறுதியாக சொல்கிறேன். பலவிதமான திறன்களை வளர்க்கும் வகையில் கல்வி அமையும். ஆசிரியர்கள், அலுவலர்களின் அறிவை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சிகளையும், உதவிகளையும் சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கும். தரமான கல்வி வழங்குவதே தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும். மேலும், பல்கலைக்கழகத்தை நன்கு அறிந்துகொண்டு தேவையான மாற்றங்களை கொண்டுவருவேன்” என்றார். பல்கலைக்கழக துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் துணைவேந்தர் திருவாசகத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, அவர்களுடன் மேற்கொண்ட சந்திப்பில், பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் கால அளவு, தொலைநிலைக் கல்வியின் தரம், பல்கலைக்கழக ஊழியர்களின் நலம் ஆகியவற்றில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதித்தார்.இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. துணைவேந்தர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்